நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறு / குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு விருப்பமுள்ள விவசாயிகள் அணுக வேண்டிய விவரங்கள் தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கி வருகிறது. அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் பெறவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார் பம்புகளை மானியத்தில் அமைத்துக் கொடுக்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், குறிப்பிட்டுள்ள தகவல் பின்வருமாறு-
"இறைக்கிற கிணறு சுரக்கும்” என்ற பழமொழிக்கேற்ப கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரினை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறு / குறு விவசாயிகளுக்கு பாசன நீரை இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் ஒரு மின் மோட்டார் பம்பு செட்டுக்கு 50% மானியமாக ரூ.15,000/- வழங்கப்படும்.
பம்பு செட் திட்டம்- மொத்த 50 விவசாயிகள்:
இதன்படி நடப்பு 2023-24 ஆம் நிதி ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொதுக் கூறு விவசாயிகளுக்கு 30 எண்கள் மற்றும் சிறப்பு கூறு விவசாயிகளுக்கு 20 எண்கள் ஆக மொத்தம் 50 எண்கள் ரூ.7.50 இலட்சம் அரசு மானியத்தில் புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள்/ திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
சிட்டா, சிறு / குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் பின்புறம் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில்), சாமந்தான் பேட்டை, தெற்கு பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் அலுவலகத்தை அணுகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பு செட் பெற விருப்பம் தெரிவித்தவர்கள் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
pic courtesy: The daily star
மேலும் காண்க:
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்- எந்த மாவட்ட விவசாயிகள் தகுதி?