CO 18009 (புன்னகை) என்ற கரும்பு இரகம் மற்றும் பிற புதிய இரகங்களின் நாற்றுகளை நிழல்வலைக்கூடம் அமைத்து உற்பத்தி செய்து விநியோகம் செய்திட மானியம் வழங்கபடவுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 6313 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 8616 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 5799 ஹெக்டேரிலும், பருத்தி 1182 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 1652 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் கரும்பு 2116 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கரும்பு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில மானியத்திட்டம் குறித்த விவரங்களை மாவட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க மானியம்:
கடமலைக்குண்டு, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் மற்றும் தேனி வட்டாரங்களில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக ஒரு பருகரணைகள் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற அளவில் மானியமாக 50% அல்லது ரூ.3750 வழங்கப்படவுள்ளது.
கரும்பு சோகையினை தீ வைத்து எரிப்பதை தடுக்க அதனை தூளாக்கிட ஹெக்டேருக்கு 50% அல்லது ரூ.2,000/ ஹெக்டேர் மானியமும், நிழல்வலைக்கூடம் அமைத்து CO 18009 (புன்னகை) என்ற இரகம் மற்றும் பிற புதிய இரகநாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட நிழல்வலைக்கூடம் அமைக்க 50% அல்லது ரூ.1.30 இலட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது.
கரும்பு: CO 18009 (புன்னகை) இரகம்
கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்தாண்டு (2023) 23 புதிய பயிர் இரகங்களை அறிமுகம் செய்தது. அதில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய CO 18009 (புன்னகை) என்கிற புதிய கரும்பு இரகமும் ஒன்று. இவற்றின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை இயந்திர அறுவடைக்கு உகந்தது.
டிசம்பர்- மார்ச் மாதங்களில் பயிரிடலாம். இவற்றின் மகசூல் எக்டருக்கு 160.39 டன்னும், சர்க்கரை மகசூல் 20.71 டன்னும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லம் காய்ச்ச CO 18009 (புன்னகை) என்கிற கரும்பு இரகம் மிகவும் ஏற்றது கூட. இவை தவிர்த்து, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விசாயிகளுக்கு 50% மானிய விலையில் மண்புழு உரப்படுக்கைகள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Read more:
நாட்டு மாட்டு சாணத்திலிருந்து பஞ்சகாவ்யா விளக்கு- KVK மூலம் சாதித்த பெண்!
PM kisan- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் கொடுத்த அட்வைஸ்!