கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதைப்போல் ஒருங்கிணைந்த தீவனபயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோட்டங்கள் அல்லது பழத்தோட்டங்களில் ஊடுபயிர் சாகுபடி மூலம் தீவன உற்பத்தியை பெருக்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதுத்தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்:
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழிகள் இலவசமாக வழங்கப்படும். நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ தேவையான கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் (ரூ.3,13,750/-) 50 சதவீதம் (ரூ.1,56,875/-) மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.
திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத (ரூ.1,56,875/-) பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மேலும் இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
பயனாளிகள் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 பயனாளிகள் முதல் 6 பயனாளிகள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். மேற்காணும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில்முனைவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி 10.07.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.
ஒருங்கிணைந்த தீவனபயிர் மேம்பாட்டுத் திட்டம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது.
25 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், நீர்ப்பாசன வசதி கொண்ட மர பழத்தோட்டங்களில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டு காலம் வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000/-ம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500/-ம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே தகுதி வாய்ந்தவர்கள் வரும் ஜீலை-20 ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கம் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெற வேண்டுமாய் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Read more:
குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு!