பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளை இணைப்பது மற்றும் பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகளுக்கு eKYC பதிவேற்றம் செய்யும் முகாம் சேலம் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஜன.15 வரை நடைப்பெற உள்ள, இந்த முகாமினை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பான செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ள விவரம் பின்வருமாறு- பி.எம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு இ.கே.ஒய்.சி (eKYC) பதிவேற்றம் செய்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தொடர்ந்து தங்கள் தவணைத் தொகையைப் பெற இ.கே.ஒய்.சி (eKYC) பதிவேற்றம் மற்றும் ஆதார் எண்ணை வங்கி சேமிப்பு கணக்குடன் இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 87,702 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணைகளாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.கிசான் திட்ட வழிகாட்டுதலின்படி பயனாளிகள் தொடர்ந்து தங்கள் தவணைத் தொகைகளை பெற்றிட இ.கே.ஒய்.சி (KYC) பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 11,918 பயனாளிகள் இத்திட்டத்தில் இ.கே.ஒய்.சி (eKYC) பதிவேற்றம் செய்யாமல் உள்னர். எனவே, தங்களது ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் இ.கே.ஒய்.சி (eKYC) வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ளலாம் அல்லது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டும் இ.கே.ஒய்.சி (eKYC) பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் சிறப்பு முகாம்:
பி.எம் கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தகுதியுள்ள விவசாயிகளை இணைத்திட வேளாண்மைத்துறை மூலம் கிராம அளவிலான அலுவலர்கள் (Village Nodal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முகாம் 15.01.2024 வரை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகம் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்களில் நடைபெறுகிறது.
விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி இதுவரை பதிவு செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் பதிவு செய்திடவும் மற்றும் பி.எம்.கிசான் முகசெயலியில் கண்சிமிட்டல் மூலம் எளிமையாக இ.கே.ஒய்.சி (eKYC) செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் பி.எம்.கிசான் திட்டத்தின் அடுத்தடுத்த தவணைத் தொகைகளை விவசாயிகள் தொடர்ந்து பெற இயலும்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் 883 விவசாயிகள் தங்களது ஆதார் எண்களை வங்கி கணக்குகளுடன் இணைக்காமலும், 1,573 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யாமலும் உள்ளனர். இப்பணிகளை செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதி தொடர்ந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு வரவு வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
விதை வாங்கும் போது இதை நோட் பண்றீங்களா? விவசாயிகளின் கவனத்திற்கு
பத்திரிக்கையாளர் டூ விவசாயம்- பசுமைக்குடில் மூலம் லட்சங்களில் வருமானம்