அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவ்விண்ணப்பங்களைப் பயோ-மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன், அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, கலந்துரையாடினார். பின்னர், அங்கு நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தடையின்றி செயல்படுத்துவதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில் குறிப்பிட்ட சில முக்கிய விவரங்கள் பின்வருமாறு-
இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலமாக பதிவு செய்யப்படும்.
விண்ணப்பப் பதிவு காலை 9-30 மணி முதல் மதியம் 1-00 மணி வரையும், பிற்பகல் 2-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும்.
குடும்ப அட்டைதாரர்களாகிய உங்கள் ஒவ்வொருக்கும் வழங்கப்படக்கூடிய டோக்கன்களில் நீங்கள் முகாமுக்கு வர வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் சரியாக வந்து, எவ்வித கூட்ட நெரிசலுமின்றி, நீங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து செல்ல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அந்த குறிப்பிட்ட நாளில் உங்களால் ஒருவேளை முகாமுக்கு செல்லமுடியாத சூழ்நிலையிருந்தால் முகாமின் கடைசி இரண்டு நாட்களில் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் கொடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டால் மொபைலுக்கு மெசேஜ்:
நீங்கள் அளித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல் குடும்பத் தலைவிக்கு தெரிவிக்கப்படும். செல்போனில் செய்தி வந்துவிடும்.
இந்தத் திட்டத்தினை நல்லமுறையில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 35 ஆயிரத்து 925 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு வரும் உங்களை வழி நடத்துவதற்காக, ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு உதவி மையத் தன்னார்வலர் என்று 35 ஆயிரத்து 925 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்“ எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
இராம்நாடு முண்டு மற்றும் சம்பா மிளகாய்களுக்கு ஏற்றுமதியில் நல்ல மவுசு