நேற்றைய தினம் இராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற மீனவர் நல மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையினை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின் இராமேஸ்வரம் வருகைத்தந்த முதல்வர் மீனவர் மாநாடு உட்பட பல்வேறு அரசு நிகழ்வில் பங்கேற்று பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இக்கூட்டத்தில் உரையாற்றிய போது 10 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
முதல் அறிவிப்பு:
மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும்.
2வது அறிவிப்பு:
45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.
3வது அறிவிப்பு:
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக அது வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில், மீனவர்கள் தொடர்பாக அளித்த முக்கியமான அறிவிப்பு இதுவாகும். இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்துக்கான நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தனது உரையில் முதல்வர் குறிப்பிட்டார்.
4வது அறிவிப்பு:
1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
5வது அறிவிப்பு:
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
6வது அறிவிப்பு:
மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்.
7வது அறிவிப்பு:
தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வு பணிகளையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
8வது அறிவிப்பு:
மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மீன் பிடிக்கையில் காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
9வது அறிவிப்பு:
மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
10-வது அறிவிப்பு:
பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் காண்க:
தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரயில்வே வாரியம்
தங்கத்தின் விலை தொடர்ந்து 4 வது நாளாக அதிரடி குறைவு- இன்றைய விலை?