தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் பருத்தி சாகுபடி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய இடுபொருட்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. மேலும், மானாவாரி பருத்தியில் அதிக மகசூல் பெற வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 'வெள்ளைத் தங்கம்' என்று அழைக்கப்படும் பயிரானது பருத்தியாகும். தமிழகத்தில் சுமார் 2000 நூற்பாலைகள் இயங்குகிறது. நாட்டின் பருத்தி நூற்புத்திறனில் முதன்மை மாநிலமாகவும் தமிழகம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. உயர்தர பருத்தி உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளில் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதனடிப்படையில் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.
நீடித்த நிலையான பருத்தி இயக்கம்:
நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டர் பரப்பளவில் செயல்படுத்திட ”நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (8.1.2022) தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ”நீடித்த நிலையான பருத்தி இயக்கம்”, 15 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், பருத்தி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய முக்கிய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரங்கள் பின்வருமாறு-
ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பதற்கான வாடகை எக்டருக்கு 1250 ரூபாயும், வேளான் சுற்று சூழ்நிலை சார்ந்த பூச்சி மேலாண்மைக்கு எக்டருக்கு 4200 ரூபாயும், ஒருங்கிணைந்த உரச்சத்து மேலாண்மை தொகுப்புகள் வழங்க எக்டருக்கு 1400 ரூபாயும், அடர் நடவு முறைக்கு எக்டருக்கு 4900 ரூபாயும் என எக்டருக்கு மொத்தமாக 11,750 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுவதாக தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மானாவாரி பருத்தியில் அதிக மகசூல் பெற வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ரகங்கள் – LRA5166, SVPR2, KC3, K11, K12
எக்டருக்கு 40:20:40 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். விதைப்பிற்கு முன் 5 கிலோ MN மிக்ஸர் மணலில் கலந்து இட வேண்டும். பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும். பயிர் வளர்ச்சி ஊக்கியான cotton plus 2.5 கிலோ/ஏக்கர் தெளிக்க வேண்டும். களைகளை கட்டுபடுத்த விதைத்த 3-வது நாளில் பெண்டிமெத்தலின் 1-1.5லி தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகலாம் என வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :
நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலை கருகல் நோய்-அறிகுறியும், தடுக்கும் முறைகளும்
TNAU சாா்பில் அறிமுகம் செய்யப்பட்ட 23 வகையான பயிா் ரகங்கள் என்ன?