நாகப்பட்டினம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் டிராக்டர்கள், அறுவடை இயந்திர உபகரணங்கள் மற்றும் விவசாய இயந்திர உபகரணங்களை நீட்ஸ் திட்டத்தின் கீழ் மானியத்துடன் வாங்குவதற்கு கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
படித்த, சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறைத் தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூ.10.00 இலட்சத்துக்கு மேலும் ரூ.5.00 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் மானியமானது திட்ட தொகையில் 25% மானியம், பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத் திறனாளிக்குக் கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75.00 இலட்சம். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனுற குறைந்தபட்சம் +2 தேர்ச்சி/ பட்டம்/ பட்டயம்/ தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21-க்கு குறையாதிருக்க வேண்டும். உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் பங்கு பொதுப்பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10%, சிறப்புப் பிரிவினர் 5% செலுத்திடல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், சேவைப் பிரிவில், மண் அள்ளும் இயந்திரங்கள், காங்கிரீட் மிக்சர் வாகனம், ரிங் போரிங் வாகனம், ரெஃப்ரிஜரேட்டட் ட்ரக் போன்ற சேவைத் தொழில்களுக்கும் கடனுதவி அளிக்கப்பட்டது.
தற்போது சிறப்பு நிகழ்வாக இத்திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திர உபகரணங்கள், டிராக்டர்கள் அனைத்து வகையான விவசாய உபயோகத்திற்கான இயந்திர உபகரணங்களை வாங்கி வாடகைக்கு விடுவதான தொழில் திட்டங்களுக்கும் கடனுதவி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் டெல்டா பகுதியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கூடுதல் பலன்பெறலாம்.
இது குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க: