தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நெல் மற்றும் இதர பயிர் விதைகளில், விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளது.
விதைப்பண்ணை அமைத்தல் திட்டம்:
விதைசான்றுத் துறை, விதைச்சட்டம் 1966 பிரிவு 8ன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் வகையில் 1979 ஆம் ஆண்டு முதல் விதைப்பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான விதைகளுக்கு சான்று அளிக்கப்படுகிறது. சமீப காலமாக இதில் கணிசமான லாபத்தினை விவசாயிகள் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணை திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விதைப்பண்ணைகளில், ஒன்றிய அரசு அனுமதித்துள்ள விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
உழவன் செயலியின் மூலம் விண்ணப்பிக்கலாம்:
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு விவசாயக் குடும்பத்திற்கு அதிகப்பட்சமாக நெல்லிற்கு 5 ஏக்கரும், இதர பயிர் விதைகளில் 12.5 ஏக்கரும் விதைப்பண்ணையாக பதிவு செய்யலாம். விதை உற்பத்தி செய்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைத்தவுடன் குறைந்தப்பட்ச ஆதார விலையில் (MSP) 80 சதவீதம் முதல் தவணை நேரடியாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும். சுத்திகரிப்பு பணி முடிந்து ஆய்வு முடிவில் விதை தேர்ச்சி பெற்றவுடன் மீதமுள்ள தொகை டான்சிடா கொள்முதல் விலையின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மற்ற விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதைப்பண்ணை- பண பரிமாற்றம் நடைமுறை என்ன?
மூல விதைகளை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வேளாண் துறை நிர்ணயம் செய்த விலையில் விநியோகம் செய்கின்றன. வழங்கப்படும் விதையானது விதைச் சான்றிதழ் துறையின் சான்று அட்டையுடன் வழங்கப்படுகிறது.
பண்ணை அமைத்து இயங்கும் போது, விதைகளை பராமரிக்க விதை சான்று அலுவலர்கள் அளிக்கும் ஆலோசனைகளை தவறாது பின்பற்ற வேண்டும். விதைப் பொருளானது, சான்றிதழ் பெற தகுதியுடைய இன / புறத்தூய்மை ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். விதைச் சான்றிதழ் அலுவலரின் ஆய்வுக்குப்பின் விதையானது முறையான அனுமதியுடன் அருகிலுள்ள வேளாண் துறையின் விதைச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
விதைகளை, விதைச் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு சென்ற பின், குறைந்தப்பட்ச ஆதார விலையாக 80 சதவீத தொகை முதல் தவணையாக நேரடியாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும். விதைச்சான்று அலுவலர் முன்னிலையில் விதைச் சுத்திகரிப்பு நிலையங்களில் விதைகள் சுத்திகரிக்கப்படும்.
சுத்திகரிப்பு நிறைவடைந்த பின்னர், விதையின் தரத்தை ஆய்வு செய்ய விதை மாதிரிகள் எடுக்கப்படும். இந்த விதை மாதிரிகள் ஆய்விற்காக விதை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனைகள் முடிந்த பின்னர் ஆய்வின் முடிவில் விதைகள் தேர்ச்சி பெற்றால் மீதமுள்ள தொகை டான்சிடா கொள்முதல் விலையின்படி உரியவருக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க:
நெற்பயிரை தாக்கும் துங்ரோ, பிரவுன் ஸ்பாட் நோய்களுக்கு என்ன தீர்வு?
பசுமை தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதி சேர்ப்பு - விவரம் உள்ளே..