வேளாண் பொறியியல் துறையில், வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50% தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250/- என்ற அடிப்படையில் 1 விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625/-ம் மற்றும் புன்செய் உழவுக்கு ரூ.1250/-ம் அதிக பட்ச மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ- வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று, நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மானிய விலையில் பவர் டில்லர்கள், களையெடுக்கும் விசை கருவிகள்:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 55 கிராமங்களில் நடப்பு நிதியாண்டில் (2023-24) காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் 106 பவர்டில்லர்கள் மற்றும் 4 களையெடுக்கும் விசை கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமத்திற்கு தலா 2 வீதம் அரசு மானியத்தில் பவர்டில்லர்கள், களையெடுக்கும் விசை கருவிகள் வழங்கப்பட உள்ளது. பவர்டில்லர்களுக்கு சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிக பட்சமாக மானியத்தில் ரூ.85000/-மும் களையெடுக்கும் விசை கருவிகளுக்கு ரூ.63000/- மற்றும் ரூ.35,000/- மும் வழங்கப்பட உள்ளது.
பவர்டில்லர் மற்றும் களையெடுக்கும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி வழியாக "வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு" "வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு மானியத்திட்டங்கள்" "மானியங்கள்" மூலம் உள் சென்று மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50% மானியமும், இதர பிரிவினருக்கு 40% மானியமும் வழங்கப்படவுள்ளது.
இதில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா, நிலவரைபடம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதற்பக்க நகல், சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயி சான்றிதழ், நிழற்படம், அடங்கல், ஆகியவற்றுடன் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டம் தொடர்பாக மேலும் ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் வேண்டுமாயின் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
- செயற்பொறியாளர் (வே.பொ.), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. கைபேசி எண்: 99529 52253.
- உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, கைபேசி எண்: 90030 90440
மேலும் காண்க: