தன்னிறைவு இந்தியாவாக உருவெடுக்க, ‘மேக் இன் இந்தியா’ (Make In India) திட்டத்தை முழுமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
தொழில் துவங்க தமிழக அரசு 25% மானியம்:
வெளிநாடுகளை சார்ந்திருக்காமல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை (Export) அதிகரிக்க வேண்டியது அவசியம். தொழில் முனைவோரை (Entrepreneurs), பொருளாதாரம் சார்ந்த உதவிகள் வாயிலாக ஊக்குவிக்க, புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நடவடிக்கையில், தமிழகத்தில் மாவட்ட தொழில் மையங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கோவை மாவட்ட தொழில் மையத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (Entrepreneurship Development Program), இளைஞர் மேம்பாட்டு திட்டம் (Young Development program) என, பல்வேறு திட்டங்களில் கடன்பெற தொழில்துறையினர் வழி நடத்தப்பட்டு வருகின்றனர். இதில், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ் - Needs) முக்கிய அங்கம் வகித்து வருகிறது. திட்டத்தின்கீழ், 10 லட்சம் முதல், 5 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி, சேவை தொழில்களை துவங்கலாம். இதற்கென தமிழக அரசு, 25% மானியம் (Subsidy) வழங்குகிறது.
புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல்:
தொழில் முனைவோர் திட்டத்தில் பயன்பெற, msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய தொழில்முனைவோரை உருவாக்க அரசு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள மாவட்ட தொழில் மையம் அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்துக்கு, 2020 – 21ம் நிதியாண்டில், 4.90 கோடி மானியத்தொகை ‘நீட்ஸ் (Needs) திட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 2.98 கோடி இலக்கு (Target) இதுவரை அடைந்துள்ளது. கடந்த, 2019 – 20 ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட, 6.66 கோடி இலக்கையும் தாண்டி, 9.15 கோடி என கூடுதலாகவே தொழில்முனைவோர் பயன்பெற்றனர்.
தொடர்புக்கு:
வியாழன்தோறும் மதியம், 3:00 மணிக்கு, 79287703871 என்ற கூட்ட குறியீட்டு எண், Gmdic என்ற கடவு சொல் வாயிலாக நடக்கும் ‘ஜூம் மீட்டிங்’கில் (Zoom Meeting) திட்டங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் கெடுபிடி! வேளாண் துறை அறிவிப்பு!
70% மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள்! முதல்வர் தொடங்கி வைத்தார்!