சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் அரசின் மானிய உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 01.09.2015 அன்று "தமிழ்நாட்டிலுள்ள ஐவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
மேலும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும் என தனது அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, மண்டல துணை இயக்குநர். மண்டல துணை இயக்குநர் அலுவலகம். துணிநூல் துறை 30/3, நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம், தாந்தோன்றிமலை, கரூர் - 639 005, கைப்பேசி எண்: 9894260713, 9843212584.
ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி அறிவித்தார். அந்த வகையில் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM மித்ரா) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க: