பீகார் மாநில வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் தோட்டக்கலை இயக்குனரகம் சார்பில் விவசாய முயற்சிகளை மேம்படுத்தவும், பயிர் சாகுபடியை பல்வகைப்படுத்தவும் பீகாரில் டிராகன் பழம் சாகுபடிக்கு தேசிய தோட்டக்கலை மிஷன் திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தை அறிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பானது டிராகன் பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதோடு, மாநிலம் முழுவதும் டிராகன் பழம் பண்ணையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும், விவசாய நிலப்பரப்பை அதிகரிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பீகாரில் டிராகன் பழ சாகுபடி
பீகாரில் உள்ள வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமானது (ATARI-Agricultural Technology Application Research Institute), பீகாரில் கடந்த 2014 ஆம் ஆண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் டிராகன் பழ சாகுபடியினை அறிமுகப்படுத்தி தீவிரமாக செயல்பட்டது. அப்போதிருந்து, கதிஹார், பூர்னியா, அராரியா, சுபால், ஜமுய், நாளந்தா மற்றும் நவாடா போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இந்த வெப்பமண்டல பழத்தை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். டிராகன் பழத்தின் தனித்தன்மை, அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதிகரித்து வரும் தேவையின் காரணமாக இப்பகுதியில் அதன் சாகுபடி தன்மை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
உதவித்தொகை அறிவிப்பு
டிராகன் பழ சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.1,25,000 யூனிட் விலையில் 40 சதவீத மானியம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மைத் துறை, தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இதுக்குறித்த பதிவு ஒன்றினை வெளியிட்டது.
அதில் "தேசிய தோட்டக்கலை மிஷன் திட்டத்தின் கீழ், டிராகன் பழத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,25,000 யூனிட் விலையில் 40% மானியம் வழங்கப்படுகிறது." என குறிப்பிட்டுள்ளது.
பீகாரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த மானியத் திட்டம் டிராகன் பழ சாகுபடி மேற்கொள்வதில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. குறுகிய காலத்தில் அறுவடைக்கு உகந்த பழமாக டிராகன் பழம் திகழ்வதால், வழக்கமான பயிர்களுடன் ஒப்பிடும்போது முதலீட்டுச் செலவு குறைவாக உள்ளது. தற்போதைய அரசின் மானிய அறிவிப்பு காரணமாக டிராகன் பழ சாகுபடியில் உண்டாகும் ஆரம்ப நிதிச் சுமைகளும் கூட கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், டிராகன் பழ சாகுபடி நோக்கி அதிக விவசாயிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிராகன் பழத்தின் விலை இந்திய சந்தையில், ஒரு கிலோவுக்கு 600 முதல் 800 ரூபாய் வரையிலான விலையில் உள்ளது. நடவு பருவம் பிப்ரவரி முதல் மார்ச் வரை நீடிக்கும். ஒரு ஏக்கர் நிலத்திற்கான ஆரம்பச் செலவு மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருக்கும் நிலையில் அரசின் மானிய அறிவிப்பு விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
Read more:
வீடி தேடிவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்- வாங்க மறந்துடாதீங்க?
புகையிலை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்- மத்திய அரசு பரிசீலனை