தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் "கலைஞர் கைவினை திட்டம் (KKT)" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.
வட்டி மானியத்துடன் கடனுதவி:
இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25% மானியத்துடன் ரூ. 3 இலட்சம் வரை வங்கி கடன் உதவியும், பட்டியிலிடப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி பெறுபவர்களுக்கு கூடுதலாக 5 % வட்டி மானியமும், தாய்கோ வங்கி மூலம் கடனுதவி பெறுபவர்களுக்கு 2 % வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் னகவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில் புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சுய வேலை வாய்ப்பு அல்லது வணிக விரிவாக்கத்திற்கு AABCS, NEEDS, UYEGP அல்லது CM ARISE திட்டங்களின் கீழ் ரூ.1.50 இலட்சத்திற்கான அதிகமான உதவித்தொகை பெற்றவராக இருப்பின் கடனை முழுமையாக திரும்ப செலுத்தியிருக்க வேண்டும்.
25 வகையான கைவினைத் தொழில்கள்:
இத்திட்டத்தில் மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள், கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மணி வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், மரவேலைப்பாடுகள், பொம்மைகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், கண்ணாடி வேலைப்பாடுகள், சிகையலங்காரம்..
அழகுக்கலை, நகை தயாரித்தல், தோல் கைவினைப்பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரித்தல், பூட்டு தயாரித்தல், கட்டிட வேலைகள், உலோக வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், சுதை வேலைப்பாடுகள், தையல் வேலை, பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினை பொருட்கள், துணி வெளுத்தல், தேய்த்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலைவேலைப்பாடுகள் செய்தல் ஆகிய 25 வகையான கைவினைத் தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற்று பயன் பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் அட்டை, விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம், விலைப்புள்ளி, நல வாரிய உறுப்பினராக இருந்தால் பதிவட்டை, உறுப்பினர் இல்லை எனில் விண்ணப்பதாரரின் சுய சான்றிதழ், விரிவாக்கத்திற்கு கடனுதவி பெற விண்ணப்பித்தால் உத்யம் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி (தொலைபேசி எண் 0461-2340152) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
Read more:
கோமாரி நோய்க்கான தடுப்பூசி: கால்நடை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடி- தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!