மக்காச்சோள சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டு கடலூர், விழுப்புரம் மாவட்டம் உட்பட 18 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை (2024-2025) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கு பின் மீண்டும் சட்டமன்ற பேரவை கூடிய நிலையில், ஜூன் 22 ஆம் தேதி வேளாண்மை உழவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் புதிதாக 29 அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதில் கவனம் ஈர்த்த சில அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-
1.மக்காச்சோள சாகுபடிக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தியை அதிகரித்திட 2024-25 ஆம் ஆண்டில் சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர் தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, திருச்சி அரியலூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள் இயற்கை உரம், நானோ யூரியா ஆகியவற்றை உள்ளடக்கிய ரூபாய் 6,000 மதிப்பிலான 50 ஆயிரம் தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, 50 ஆயிரம் எக்டரில் மக்காச்சோள சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
2.உயர் தொழில்நுட்ப சாகுபடிக்கு ரூ.10.19 கோடி மானியம் ஒதுக்கீடு
உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளான பசுமைக் குடில், நிழல் வலைக் குடில்களில் பாதுகாக்கப்பட்ட சூழலில் குடை மிளகாய், வெள்ளரி, தக்காளி, முட்டைக்கோஸ், கார்னேசன், ஜெர்பரா, ரோஜா, ஆர்கிட், ஸ்ட்ராபெர்ரி போன்ற பயிர்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம், விவசாயிகள் அதிக வருவாய் பெற்றிடும் வகையில் 2024-25ஆம் ஆண்டில் பசுமைக் குடில்கள், நிழல்வலைக் குடில்கள் அமைத்திட விவசாயிகளுக்கு 10 கோடியே 19 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
3. ரூ.10 கோடி செலவில் பாதுகாப்புக் கூடங்கள்
வேளாண் விளைபொருட்களை, மழையினால் ஏற்படும் சேதங்களிலிருந்து வீணாகாமல் பாதுகாத்திட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர் ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2024-25 ஆம் ஆண்டில் தலா 15,000 சதுர அடியில் பாதுகாப்புக் கூடங்கள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
4.பயறுவகைகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் துவரை உள்ளிட்ட பிற பயறுவகைகள் சாகுபடியினை மேலும் ஊக்கப்படுத்தி புதிதாக 30,000 ஏக்கரில் பரப்பு விரிவாக்கம் செய்யும் விதமாக சாகுபடிக்குத் தேவையான விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவை போன்ற இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் வாயிலாக பயறு வகைகளின் உற்பத்தித்திறனும் உயரும். இதற்கென 2024-25 ஆம் ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
5.மிகச்சன்ன இரக நெற்பயிர் சாகுபடி- 50 சதவீத மானியத்தில் விதைகள்
விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில், அதிக சந்தை விலை கொண்ட மிகச்சன்ன வகை நெல் இரகங்கள் சாகுபடியினை விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்திட 2024- 25 ஆம் ஆண்டில் 2000 மெட்ரிக் டன் மிகச்சன்ன வகை உயர் விளைச்சல் நெல் இரகங்களின் சான்று விதைகள் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென எட்டு கோடியே 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
Read also: நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண்
6.ரூ.4 கோடி ஒதுக்கீட்டில் காய்கறி சாகுபடிக்கு நிழல் வலைக்குடில்கள்
கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து விலை ஏற்றம் அடைகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் நிழல்வலைக்குடில்கள் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் பாதுகாக்கப்பட்ட சூழலில் கத்தரி, தக்காளி, குடைமிளகாய், கீரைகள் உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும். இதற்கென 2024-25 ஆம் ஆண்டில் 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். (மற்ற அறிவிப்புகளின் முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கிரிஷி ஜாக்ரனின் வலைத்தள பக்கத்தை காணவும்.)
Read more:
கொஞ்சம் மருந்து தெளிச்சாலும் பிரச்சினை தான்- மிளகாய் ஏற்றுமதியில் அசத்தும் இயற்கை விவசாயி
ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!