State

Friday, 26 April 2024 11:01 AM , by: Muthukrishnan Murugan

subsidy scheme for farmers

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி சிறப்பு திட்டமானது தற்போது வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் எள், உளுந்து, பாசிப்பயறு மற்றும் மணிலா போன்ற குறைந்த கால பயிர்களை கோடைப் பருவத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதுத்தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  கோடையில் மாற்றுப்பயிராக பயறு வகைப்பயிர்களை சாகுபடி செய்யும் போது அவற்றின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து (N) சேகரிக்கப்பட்டு மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இதே போல் குறைந்த வயதில் அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக் கூடிய எள் பயிரினையும் கோடையில் சாகுபடி செய்யலாம். எள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை அளவே போதுமானது ஆகும். எள் பயிரானது அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக் கூடியது. நிலக்கடலை பயிரினை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம்.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்:

காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து விவசாயிகளும் நடப்பு கோடைப் பருவத்தில் மேற்கண்ட குறுகிய கால மற்றும் மண் வளம் காக்கும் பயிர்களை பயிரிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட பயிர் சாகுபடிக்கு தேவையான உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகிய பயிர்களுக்கான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் தற்சமயம் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது.

விவசாயிகள் அவற்றை 50 சதவீதம் மானியத்தில் பெற்று பயன் பெறலாம். நிலக்கடலை விதைகள் இம்மாத இறுதிக்குள்ளும், எள் விதைகள் எதிர்வரும் மே மாத இறுதிக்குள்ளும் அனைத்து வட்டார / துணை வட்டார விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்படும்.

மேலும் மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மாவிரிடி ஆகிய இடுபொருட்களையும் அனைத்து வேளாண் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை:

கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ள பசுந்தாள் உர விதை விநியோகத்திலும் முன்னுரிமை வழங்கப்படும். கோடைப் பயிர் சாகுபடிக்கு பிந்தைய நாட்களில் பசுந்தாள் உர விதைகளை விதைத்து 45 நாட்களில் (அதாவது பூ பூக்கும் பருவத்தில்) மடக்கி உழுவதன் மூலமாக தழைச்சத்தானது மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு மண்ணின் தரம் மேம்படுத்தப்படுகிறது. மண்ணிலுள்ள கரிமச்சத்தின் அளவும் படிப்படியாக அதிகரித்து மண்ணின் வளம் பேணப்படுகிறது.

எனவே திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள், நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறவும். மண் வளத்தைப் பாதுகாக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.

Read more:

மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)