இங்க அடிச்சா அங்க கேட்கும் - என்கிற வாசகத்துடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. இனி ஊராட்சி அளவிலான எந்த குறையாக இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்தே புகார் செய்ய இயலும். அது என்ன அரசின் திட்டம், அதனால் என்ன பயன் என்பதை இப்பகுதியில் காணலாம்.
ஊரகப்பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு ஊராட்சி மணி என்கிற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் , பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் ”155340 “ பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 12,525 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்காக 'ஊராட்சி மணி' என்ற குறை தீர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொடர்பு எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ள 155340 என்ற எண்ணினை அனைத்து நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புக்கொள்ளலாம்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் தனி உதவியாளர் அந்தந்த மாவட்டங்களிலும் குறை தீர்க்கும் முறைக்கு நோடல் அலுவலராக இருப்பார். ஒவ்வொரு மாதமும் இந்த முறையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்துகள் தொடர்பான குடிநீர், சாலை, வீட்டு வசதி, சுகாதாரம், கட்டிட திட்ட அனுமதி, வரி தொடர்பான கேள்விகள், குப்பை அகற்றுதல், புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி போன்றவற்றில் மக்கள் தங்கள் புகார்களை ஊராட்சி மணி மூலம் தெரிவிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பிரச்சினைத் தொடர்பான தனிப்பட்ட அலுவலகங்களைத் நாட வேண்டியதில்லை. கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்,'' என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகார் அளித்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புகார் தீர்க்கப்படாவிட்டால், அது தானாகவே அடுத்த நிலை அதிகாரி முதல் ஊரக வளர்ச்சி இயக்குனரகத்தின் உயர் அதிகாரி வரை சென்று புகார் எதுவும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறைகளைத் தீர்ப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, புகார்களின் தன்மையைப் பொறுத்து காலக்கெடு நிர்ணயிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மேலும் காண்க:
வேளாண் கருவி மானியத்தில் பெற என்ன செய்ய வேண்டும்?
எம்.எஸ்.சுவாமிநாதன் வைத்த கோரிக்கை- மறுகணமே நிறைவேற்றிய கலைஞர்