நடப்பாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டினை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் சமீபத்தில் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்றாக ”ஒரு கிராமம் ஒரு பயிர்” (ONE VILLAGE - ONE CROP) கருதப்படுகிறது.
இந்த திட்டத்தினை செயல்படுத்த அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன? அதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மையென்ன? போன்ற தகவல்களை வேளாண் ஆலோசகரான அக்ரி.சு.சந்திரசேகரன் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
ஒரு கிராமம் ஒரு பயிர்:
ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் இந்த புதிய திட்டத்தினை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் செயல்பாடுகள்:
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு வருவாய் கிராமம் என்ற வகையில், அந்த கிராமத்திலேயே அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்ற பயிரை தேர்வு செய்து 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை உள்ள நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிலங்களின் மண்மாதிரி ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்க பட்ட உரங்களை இடப்படும்.
சாகுபடிக்கான பயிர்கள் விவரம்:
- நெல் உள்ளிட்ட தானியங்கள் (கம்பு,சோளம்,ராகி,மக்காசோளம்)
- சிறுதானியங்கள் (வரகு,குதிரைவாலி,தினை)
- பயறுவகை பயிர்கள்( உளுந்து, பாசிபயறு)
- எண்ணெய் வித்துப்பயிர்கள் (நிலக்கடலை,சூரிய காந்தி,எள்)
- பணப்பயிர்கள் (பருத்தி, கரும்பு)
பயிர் சாகுபடிக்கு தொழில்நுட்ப தீர்வுகள்:
மேற்குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடிக்கான நிலம் தயாரிப்பு, விதைதேர்வு, விதை நேர்த்தி, விதைப்பு, உர மேலாண்மை, களை நிர்வாகம், பூச்சி / நோய் கட்டுப்பாடு, அறுவடைக்கு பின் செய் நேர்த்திகள், சந்தைபடுத்துதல் உட்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் விவசாயிகளை கடைப்பிடிக்க விழிப்புணர்வு வழங்கப்படும்.
இந்த திட்டம் செயல்படும் பகுதியில் விவசாயிகளுக்கு, கடனுதவி மற்றும் பயிர்காப்பீடு போன்றவற்றை பெற்ற தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பயிரில் எற்படும் பூச்சி / நோய் கண்காணிக்க நிரந்தர பூச்சி / நோய் கண்காணிப்பு திடல் (FIXED PLOT SURVEY FOR PEST SURVEILLANCE) அமைக்கப்பட்டு பயிரில் எற்படும் பூச்சி/ நோய் தாக்குதலை அவ்வப்போது விவசாயிகளுக்கு தெரிவித்து உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தால் என்ன பயன் ?
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட ”ஒரு பயிர்- ஒரு மாவட்டம்” (ONE DISTRICT- ONE CROP) திட்டத்திற்கு அடிப்படையாக இவை இருக்கும். குறைந்த செலவில் அனைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் கூடுதலான மகசூல் பெறலாம். இந்த திட்டத்தால் குறைந்த பட்சமாக 15% முதல் 20% வரை மகசூல் பெற வாய்ப்புள்ளது. உற்பத்தி செலவும் கணிசமாக குறையும், வருமானமும் கணிசமாக உயரும் (சந்தைபடுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்படும் போது கூடுதலான வருவாய் கிடைக்கும்).
குறிப்பிட்ட பயிர் சாகுபடியில் விவசாயிகள் நிபுணத்துவம் (MASTER) அடைய வாய்ப்புள்ளது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்துவதுடன் தொழில்நுட்ப நுண்ணறிவு பெறவும் வழிவகை செய்கிறதென, அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் (9443570289) தெரிவித்துள்ளார்.
Read more:
கிணறு தோண்ட அரசிடமிருந்து கடனுதவியா? கரும்பு விவசாயி விளக்கம்
Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!