அரசு பேருந்துகளில் தற்போது வரை 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கி வரும் நிலையில் அதனை 5 வயதாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அமைந்தது முதலே போக்குவரத்துத் துறை சார்ந்து பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள், வெளியாகி வருகின்றன. அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று கட்டணமில்லா பேருந்து சேவை தொடர்பான புதிய அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிட்டுள்ளவை- நீண்ட காலமாக தமிழக அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பள்ளி மாணவர் முதல் மகளிர் வரை:
ஏற்கெனவே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு. 60 வயதை பூர்த்தி அடைந்த முதியவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டமும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, 258.06 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர் என சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான இருக்கை அதிகரிப்பு:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்(TNSTC) கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, உள்ளிட்ட பல்வேறு வகையான சொகுசு வசதிகள் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வகையில் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்பு பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு அரசு விரைவு பேருந்திலும் 2 இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த இருக்கைகளின் எண்ணிக்கையினை 4 ஆக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி வரும் தமிழக போக்குவரத்து துறைக்கு இது கூடுதல் நிதிச்சுமையினை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் காண்க: