திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொடுவா மீன்வளர்ப்பிற்காக புதிய மீன்வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாகவும், கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றித்திரிவதை தடுத்திட நடவடிக்கை எடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான அறிவிப்பின் முழு விவரம்-
திருவள்ளூர் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடும் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2023-24 ஆண்டிற்கான உவர்நீரில் கொடுவா மீன்வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் உவர்நீரில் கொடுவா மீன்வளர்ப்பிற்காக புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த தொகை ரூ.14.00 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.5.60 இலட்சம் மற்றும் பட்டியல் இன (SC/ST) பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.8.40 இலட்சம் மானியமாகவும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி மூப்பு நிலை அடிப்படையில் தகுதியான பயனாளிக்கு பணி ஆணை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி அலுவலகம், எண்.05, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி மற்றும் தொலைபேசி எண். 044-27972457 அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை விவசாயிகளுக்கு அபராதம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளில் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள கால்நடைகள் சுற்றித்திரிவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளை அவைகளின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு அவர்களது இடத்தில் கட்டிபராமரிப்பது அவரவரின் கடமை ஆகும். அவ்வாறு கால்நடைகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் அவைகள் சாலைகளில் இரவும் பகலும் சுற்றி திரிவதுடன் சாலைகளிலேயே படுத்துக்கொள்கின்றன. இதனால் சாலைகளில் வாகனங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் அடிக்கடி சாலைவிபத்துகளும் ஏற்பட்டு அதிகமான மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளும் விபத்துகளில் கடுமையாக பாதிப்படைகின்றன.
எனவே உரிமையாளர்களின் பராமரிப்பில் இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை வட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவானது முறையாக கண்காணித்து அவைகளைகைப் பற்றுகளை செய்து அருகில் உள்ள கோசாலைகளில் ஒப்படைக்கவும் சம்மந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கோசாலையில் பராமரிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு பராமரிப்புத்தொகை ரூ.500/- கட்டாயம் வசூல் செய்யவும், இரண்டாவது முறையாக அதே உரிமையாளர்களின் கால்நடைகளை கைப்பற்றும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் சிறைத்தண்டனை பெறுமளவிற்கு குற்றவியல் நடவடிக்கைகள் வருவாய் கோட்டாட்சியர்/ உட்கோட்ட நடுவர் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
விவசாய நிலம் வாங்க மானியத்துடன் 6 % வட்டியில் வங்கி கடனுதவி!
வெற்றிலை வள்ளி கிழங்கில் உயிர் வலுவூட்டல்- மறைந்திருக்கும் பயன்கள்