நம் சமையலறையில் உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் உன்னத பொக்கிஷங்கள் பல உள்ளன. அவற்றை அடையாளம் கண்டுகொண்டு, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டாலே போதும், பல நோய்களில் இருந்து விடுபட உதவும். அப்படியொரு பொக்கிஷம்தான் கிராம்பு.
உருவத்தில் சிறியதாகத் தோற்றமளிக்கும் கிராம்பு நம் ஆரோக்கியத்திற்கு ஆகப்பெரிய நன்மைகளை செய்கிறது. தினமும் காலை 2 கிராம்பு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி உள்பட பல நன்மைகள் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சமையலில் மசாலா வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக்கு தனி சுவை தருகிறது. வெறுமனே சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
செரிமானம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். கிராம்பு அதை செய்ய வல்லது. செரிமான பிரச்சினைகளை போக்க உதவும். செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நோய் தொற்றுக்கு எதிராக போராடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
கல்லீரல் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
பல்லுக்கு உறுதி
பற்களுக்கும் கிராம்புக்கும் ஆயிரம் தொடர்பு உண்டு. கிராம்பு உண்பது பல் வலியைக் குறைக்கிறது. கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலி போகும் என்று கூறுவர்.
வாய் கிருமிகளை நீக்கும்
காலையில் 2 கிராம்புகளை வாயில் போட்டு அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்கும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாய் சுகாதாரமாக இருக்கும். கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷ் செய்து பயன்படுத்தலாம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோய்க்கு கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலை செய்கிறது.
மேலும் படிக்க...