ஒரு பொருளை வாங்கிவிட்டு ஏன் வாங்கினோம் என புலம்புபவர்கள் ஏராளம். இதற்குப் பெயர் போஸ்ட் பர்சேஸ் ஆன்ஸைட்டி. இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு என்ன தீர்வு எனப் பார்ப்போம். விடுமுறையன்று ஷாப்பிங் செய்யலாம் என ஷாப்பிங் மாலுக்குச் செல்கிறீர்கள். அங்கு ஒரு மின்னணு பொருள் விற்பனை அங்காடியில் உள்ள கடை ஊழியர், தள்ளுபடி விலையில் தற்போது அதிநவீன எல்இடி டிவி விற்கப்படுவதாகவும் உங்கள் பழைய டிவியை மாற்றி புதிய டிஜிட்டல் அனுபவம் பெற இதுவே நல்ல தருணம் என்றும் உங்களின் ஆசையைத் தூண்டுகிறார். கிரெடிட் கார்டை எடுத்து ஒரு இழுப்பில் ஒரு லட்ச ரூபாயை காலி செய்து டிவியை சொந்தமாக்கிக் கொள்கிறீர்கள்.
போஸ்ட் பர்ச்சேஸ் ஆன்சைட்டி (Post purchase anxiety)
அலுவலகம் சென்ற பிறகு, உங்கள் நண்பர் இந்த டிவிக்கு ஏன் இவ்வளவு செலவு செய்தீர், கொஞ்சம் பொருத்து வாங்கி இருக்கலாமே என கூறி உங்கள் மனதில் கல்லெறிந்துவிட்டு அவர் வழியில் சென்றுவிடுகிறார். பின்னர் மின்னணு பொறியியல் விஞ்ஞானியாக உங்களை நீங்களே கற்பனை செய்துகொண்டு, நீங்கள் வாங்கிய புது டிவி குறித்து யூடியூப் ரெவ்யூக்களை அலசுகிறீர்கள். இதே விலையில் மேலும் சில வசதிகளுடன் அதிநவீன டிவிக்கள் உள்ளதைக் கண்டு பதற்றம் அடைகிறீர்கள். நாள் முழுக்க வேலை ஓடாமல் தவறான பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்வுடன் தவிக்கிறீர்கள். இதற்குப் பெயர்தான் போஸ்ட் பர்ச்சேஸ் ஆன்சைட்டி என்கிறது உளவியல்.
இந்த ஆன்சைட்டி டிவி வாங்கிய பின்னர் மட்டும் வரும் என நினைத்தால் அது தவறு. திருமணம் முடித்து சில நாட்களில் கூட வரலாம். இதற்கு முக்கியக் காரணம் நமது மனதுதான். இதைத் தான் மனம் ஒரு குரங்கு என நமது முன்னோர் சொல்லிச் சென்றனர். இதையே தான் தற்போதைய உளவியலும் சொல்கிறது. இந்த ஆன்சைட்டி நிலை சிலருக்கு சில நிமிடங்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கக் கூடும். இது தற்காலிகமான மன உளைச்சல் தான். எனவே இதனைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.
வாழ்க்கையில் நாம் அனைவருமே இந்நிலையை ஒருமுறையேனும் கடந்து வந்திருப்போம். சரி..! இதற்கு தீர்வுதான் என்ன என்று கேட்டால், காலம் தான் தீர்வு என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். நாம் செய்த தவறுகளை மறக்கவும், நமது குற்ற உணர்வில் இருந்து தப்பிக்கவும் மறதி மற்றும் கால மாற்றம் உதவும். இந்த ஆன்சைட்டியும் காலத்தால் அழியக்கூடிய ஒன்று.
நீங்கள் பல மாதம் ஆய்வில் ஈடுபட்டு வாங்கிய பொருட்களைப் பட்டியலிடுங்கள். அவற்றில் எத்தனை பொருட்களை நினைத்து இன்றும் பெருமைபட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும்
அதே சமயத்தில் எதேச்சயாக நீங்கள் வாங்கிய பொருட்கள் சில, நீடித்து உழைத்துக்கொண்டு இருக்கும். எனவே இந்த ஆன்சைட்டி வரும்போதெல்லாம் இந்த பட்டியலை நினைவில் கொண்டு இதனை கடந்து செல்லப் பழகுங்கள்.
மேலும் படிக்க
உடல் எடையை குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்!
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!