காலத்திற்கேற்ப நம்மை நாமே பாதுகாத்தும், பராமரித்தும் கொள்ள வேண்டும். குடும்ப தலைவியெனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது நலனையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது. பருவ நிலைக்கு ஏற்ப நோய்களும் நம்மை தாக்குகின்றன. வெயில் காலம் வந்து விட்டால் உடல் சூடு, உடல் வறட்சி, நீர்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள், குளிர் காலம், மழை காலம் எனில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சனைகள்.. ஆனால் இவை அனைத்தையும் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மழைக் காலங்களில் உண்டாகும் டெங்கு சற்று குணப் படுத்துவதற்கு கடினமானது.
டெங்கு என்பது என்ன?
டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' ADS என்ற ஒரு வகையான கொசுக்கள் மூலம் பரவுகிறது.
டெங்கு எவ்வாறு பரவுகிறது?
பொதுவாக டெங்கு கொசுவனது நல்ல தண்ணீரில் தான் உருவாகும். எனவே நல்ல தண்ணீர் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அழையா விருந்தாளியாக வந்துவிடும். குறிப்பாக வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்படும் சிறு குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் எளிதில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இந்த கொசு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.
டெங்கு கொசுவின் அமைப்பு
ஏடிஸ்' கொசுக்கள் உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்டிருக்கும். இது மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும் தன்மை கொண்டது. பொதுவாக இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன.
கொசு உருவாகுவதை தடுக்கும் முறை
ஏடிஸ் வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாள்களாகும். இந்த வகை கொசுக்கள் உருவாகும் இடங்களை முழுவதுமாக அழித்து விட வேண்டும். வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் என அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலை பரவாமல் தடுக்க முடியும்.
டெங்குவின் அறிகுறிகள்
காய்ச்சல், உடல் சோர்வு, தீராத தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவது மிக அவசியமாகும்.
தீர்வுகள்
- எல்லா வகையான நோய்க்கு மருந்துண்டு என்பதை நாம் உணர வேண்டும். முறையான பராமரிப்பும், போதுமான ஓய்வும் மிக முக்கியமானது.
- உடல் சோர்வை போக்க நீர்ச்சத்து இன்றியமையாதது. எனவே தண்ணீர், பழச்சாறுகள் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
- நம்மை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் தூங்கும் போது கொசுவலையை பயன்படுத்தலாம்.
- எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரை அனுகி முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புச் சாறு போன்றவற்றை பருகலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran