ஒமிக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மிரட்டும் ஒமிக்ரான் (Intimidating Omicron)
கொரோனாவைத் தொடர்ந்து பலவகை வைரஸ் தொற்றுகள் நம்மைப் பதம் பார்த்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நாம் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பது ஒமிக்ரான் வைரஸிடம்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது.
37 பிறழ்வுகள்
இந்த ஒமிக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமிக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.
விஞ்ஞானிகள் அடையாளம்
இந்த நிலையில், ஒமிக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (Anti-body) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஒமிக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் இதுபற்றி கூறும்போது, ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களைக் குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்பு சொல்கிறது எனக் குறிப்பிட்டார்.
இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு தகவல்கள் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
விரைவில் தடுப்பூசி (Vaccinate soon)
ஒமிக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருப்பதால், இவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...