பஞ்சத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களின் நிலை மிகக் கொடுமையானது. அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனையால் மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் அவதி படுகின்றார்கள். தண்ணீர் சேமிக்க வேண்டும், அனைவரும் நீரை சேமியுங்கள், நீரை வீணாக்காதீர்கள், தண்ணீர் நம் வாழ்வாதாரம், இயற்கையின் ஆதாரம், என்றெல்லாம் கூறுகிற நாம் தண்ணீரை சேமிக்கின்றோமா?
தண்ணீரை சேமிக்க எத்தனையோ வழிகள் உண்டு. அதை நம் வீட்டில் இருந்து துவங்குவதே சிறந்த எடுத்துக்காட்டாகும். தினமும் நாம் பயன்படுத்தும் நீரின் அளவை நினைத்து பார்த்தது உண்டா? காலையில் பல் துலக்குவது முதல் இரவு உறங்குவதற்கு முன்வரை நாம் பயன்படுத்தும் தண்ணீரானது நம் வாழ்வின் ஆதாரம்.
பல்துலக்கும் பொழுது நம்மில் எத்தனை பேர் தண்ணீர் குழாயை திறந்து விட்டு நீரை வீணாக்குகிறோன், குளிக்கும் போது ஷாவர்க்கு அடியில் நின்றவாறு எவ்வளவு நீரை வீணாக்குகிறோம், இந்த நீரெல்லாம் நமக்கு சொந்தமானதா? குடிசை வீடுகளில் , ரோட்டோரம் வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் தண்ணீரின் முக்கியத்துவம் என்னவென்று. மாடி வீடுகளில், அரசு குடியிருப்பில், சொந்த வீட்டில் போர் போட்டிருப்பவர்களுக்கு, தெரியாது தண்ணீர் எத்தனை முக்கியம் என்று. நினைத்த நேரத்திற்க்கு குழாயை திறந்தால் நிமிடத்தில் தண்ணீர் கிடைக்கிறது. பின் என்ன கவலை அவர்களுக்கு. ஆனால் தண்ணீருக்கு தவிக்கும் மக்களை நினைத்துப்பாருங்கள், பிற்காலத்தில் நமக்கும் இந்த நிலைமை வந்துவிட கூடாது என்று நீரை சேமிக்கும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
சுயநலம் கொண்டாவது தண்ணீரை சேமியுங்கள்
பல்துலக்கவும், குளிக்கவும் தேவைப்படும் நீரை மட்டுமே பயன்படுத்துங்கள், துணிகளை துவைக்கும் பொழுது பக்கெட் நிரம்பிய பிறகே துணிகளை அலசுங்கள், குழாயை திறந்து விட்டுக்கொண்டே துணிகளை அலசினால் தண்ணீர் வீணாவது துளி கூட தெரியாது. சமைத்த, சாப்பிட்ட பாத்திரங்களை, உடனே கழுவி விட்டால் தண்ணீர் உபயோகம் கட்டுப்பாடாக இருக்கும். எல்லா பாத்திரத்தையும் ஒன்றாக கழுவிக்கொள்ளலாம் என்றால் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் வீணாகிறது.
சரி! மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் வருங்காலத்தில் நீங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்க வேண்டாம் என்ற சுயநலம் கொண்டாவது தண்ணீரை சேமியுங்கள்....... நீரை சேமிப்போம்........
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN