நமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று இளநீர். உடல் சூட்டைத் தணிப்பதுடன் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் இளநீர் உள்ளது.
இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்களில் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள 'சுக்ரோஸி'ன் அளவே காரணம். இளசாக உள்ள போது இதில் 'சுக்ரோஸ்' அதிக அளவு இருக்கும்.
இதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.
தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேங்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.
இளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் சதைப் பகுதி அதிக புரதச்சத்து நிறைந்ததாகும்.
இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாகக் கூறப்படுகிறது. தினமும் இளநீர் அருந்துவதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமை அடைந்து நம் உடலைத் தாக்கும் தொற்றுக் கிருமிகளைத் தடுத்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் சிறுநீர்ப் பெருக்கிகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி, தைராய்டு சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப் படுத்துகிறது இளநீர்.
இளநீரில் உள்ள சத்துக்கள்
- நீர்=95%
- பொட்டசியம் = 310 மி. கிராம்,
- குளோரின் = 180 மி. கிராம்,
- கால்சியம் = 30 மி.கிராம் ,
- பாஸ்பரஸ் = 37 மி. கிராம்,
- சல்பர் = 25 மி. கிராம்,
- இரும்பு = 15 மி.கிராம்,
- காப்பர் = 15 மி.கிராம்,
- வைட்டமின் ஏ = 20 மி. கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துக்கள்.