கடந்த ஜனவரி 3ம் தேதி துவங்கி, 15 - 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கல்லுாரி, பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் பங்கு பெற விரும்பினாலும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.
கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, 'சீரோ சர்வே' எனப்படும் மக்கள்தொகையில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பாலும், அறிகுறிகள் இல்லாத பாதிப்பாலும், வைரசுக்கு எதிரான 'ஆன்டி பாடீஸ்' எனப்படும் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகி உள்ளது என்ற புள்ளி விபரம் எடுக்கப்பட்டது.
தொற்று பரவ வாய்ப்பு (Chances for Spreading infection)
6 - 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பெரியவர்களுக்கு இணையாக பாதிக்கப்படுவதும், அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதிலும், 12 - 18 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினர் மிக அதிகளவில் 'பாசிட்டிவ்' ஆக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. ஆனாலும் நிறைய பெற்றோர், இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு பற்றி, தினமும் என்னிடம் சந்தேகத்துடன் கேட்கின்றனர்.
அவசர தேவைக்காக தற்போது நம் நாட்டில், 'டிரக்ஸ் கன்ட்ரோலர் ஜெனரல் ஆப் இந்தியாவால் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், கோவாக்சின் மற்றும் சைகோவ் - டி. இவற்றை 12 - 18 வயது வரை போட அனுமதித்திருந்தாலும், 15 - 18 வயது குழந்தைகளுக்கே முதலில் அரசு போடுகிறது.
கோவாக்சின் (Covaxin)
ஊசி வழியே தசைகளில், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் செலுத்தப்படும். சைகோவ் - டி ஊசி இல்லாமல் உள் தோலில் மூன்று டோஸ்கள், 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும். இந்த இரண்டு மருந்துகளின் செயல்திறன், பாதுகாப்பு, முழுமையாக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, டி.சி.ஜி.ஐ., அனுமதி வழங்கிஉள்ளது.
சைகோவ் - டி
நம் நாட்டில் தயாரான, உலகின் முதல் பிளாஸ்மிட் டி.என்.ஏ., தடுப்பூசி, நியூக்ளிக் அமில தடுப்பூசி வகையைச் சேர்ந்தது. 'ஜெனட்டிக் இன்ஜினியரிங்' என்று சொல்லப்படும் மரபியல் பொறியியல் தொழில்நுட்பத்தில் தயாரானது, சைகோவ் - டி தடுப்பூசி. கொரோனா வைரசில் உள்ள மரபணுவின் ஒரு பகுதியான டி.என்.ஏ., அல்லது ஆர்.என்.ஏ.,வில் உள்ள நியூக்ளிக் அமிலத்தில் ஒரு பகுதி எடுக்கப்பட்டு, தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து இது. கொரோனா வைரசில் உள்ள 'ஸ்பைக்' புரோட்டினுக்கு எதிராக செயல்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவாக்சின் தடுப்பூசி, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு, அதன் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசிகளிலும் பக்க விளைவு மிகக் குறைவாக, விரைவில் சரியாகக் கூடியதாகவே இருக்கிறது.
தனிநபரின் பாதுகாப்பை தாண்டி, குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் தான், நேரடி வகுப்புகளுக்கு பாதுகாப்பாக செல்ல முடியும். குழந்தைகள் தொற்றில் இருந்து தப்பிப்பதோடு, அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்கும். இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்பதில் எந்த சந்தேகமும் பெற்றோருக்கு வேண்டாம்.
டாக்டர் கே.ஹரி பிரசாத்,
தலைவர்,
அப்பல்லோ மருத்துவமனை குழுமம், சென்னை.
மேலும் படிக்க
டெல்டா மற்றும் ஒமைக்ரானை எதிர்க்கிறது உளாநாட்டுத் தயாரிப்பான கோவாக்சின்!