உடல் நலம் காப்பதில் திணை வகைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினந்தினம் திணை வகைகளை உண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. பெயரில் சிறியது என்று எளிமையாகக் குறிப்பிடப்படும் தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற சிறுதானியங்கள் பலன் தருவதில் பெரியவையாக உள்ளன. ஆரோக்கிய வாழ்வுக்காக இன்று பலரும் தேடிச் செல்லும் உணவாகவும், பலர் பின்பற்ற நினைக்கும் உணவாகவும் சிறுதானியங்கள் உள்ளன. அவற்றின் பண்பு நலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நார்ச்சத்து மிகுந்த தினை :
தினை நார்ச்சத்து மிகுந்தது. இந்த நார்ச்சத்து (Fiber) மலச்சிக்கலை போக்க வல்லது. மேலும் இந்த உணவு வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தி, அவற்றில் உள்ள புண்களை ஆற்றும் சக்தியுடையது. உடல் தசைகளின் வலுவிற்கும், சரும மென்மைக்கும் மிகவும் அவசியமான புரதச்சத்து இதில் நிறைவாக உள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த சாமை:
சாமான்ய மக்களின் விருப்ப உணவாக திகழ்ந்த காரணத்தால் சாமை என்ற பெயர் பெற்றது. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகளவு இரும்புச்சத்து (Iron) இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் நார்ச்சத்து சாமையில் 7 மடங்கு அதிகமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குதிரைவாலி:
வாலரிசி என்றழைக்கப்படும் குதிரைவாலி மற்ற சிறுதானியங்களை விட மிகவும் சிறியது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க வல்லது. 100 கிராம் குதிரைவாலியில் புரதம் 6.2 கிராம், கொழுப்பு 2.2 கிராம், தாதுஉப்பு 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் அளவிலும் இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் நலத்திற்கு என்றுமே சிறந்தது உணவே மருந்து தான்
எடையை பராமரிக்க கேழ்வரகு:
கேழ்வரகு உண்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இது சேதமடைந்த திசுக்களை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தவும், குடலுக்கு வலிமை சேர்க்கவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய்களை நீக்கவும் உதவுகிறது. இதில் கால்சியம் சத்து அதிகளவு இருப்பதால் எலும்பு சம்பந்தமான நோய்களை விரட்டும்.
புரதம் நிறைந்த கம்பு :
உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55 சதவிகித இடத்தை கம்பு பிடித்திருக்கிறது. இதில் 11.8 சதவிகிதம் புரதம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது. கண் பார்வைக்கு அவசியமான வைட்டமின் ஏ சத்து உருவாவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் இதில் அதிகளவு உள்ளது.
மேலும் படிக்க