நாம் தினசரி வாழ்வில் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று ஜலதோஷம். சாதாரண ஜலதோஷம் தீங்கில்லாதது. தானாகவே குணமாகி விடக்கூடியது. ஆனால், கொரோனா அறிகுறிகளில் ஒன்றாகவும் சளித்தொல்லை இருப்பதால் இன்று அதிக கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. கொரோனாவின் மூன்றாம் அலை குழந்தைகளிடம் அதிகம் பரவும் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஜலதோஷத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படையான விஷயங்களைப் பார்ப்போம்…
வைட்டமின் சி
வைட்டமின் சி என்பது எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கக் கூடியது. அது மட்டுமே ஜலதோஷத்திற்கான தீர்வாகாது. தொடர்ந்து வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கினால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும். அதன் விளைவாக அடிக்கடி நோய்வாய்ப்படுவது தவிர்க்கப்படும். வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஜலதோஷம் மற்றும் இருமல் வந்தால் அவை நீண்ட நாள் நீடிக்காமல் சீக்கிரமே குணமாகலாம். பால், பூண்டு, பசலைக் கீரை, கொய்யாப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் என்பதால் இவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
ஆன்ட்டிபயாட்டிக்
சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால் போதும் என்கிற எண்ணம் படித்தவர்கள் மத்தியிலேயே இருக்கிறது. ஆனால் பிரச்னைக்கு என்ன காரணம், அது பாக்டீரியா தொற்றினால் ஏற்பட்டதா அல்லது வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதா என்பது தெரியாமல் பாக்டீரியாவை மட்டுமே கொல்லும் ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது பாதுகாப்பற்றது. தாமாகவே மருந்துக்கடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் வாங்கிப் பயன்படுத்துவது மிக மோசமான பழக்கம். அந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாத நிலை ஏற்படும்.
வெந்நீர் கொடுக்கலாமா?
நிச்சயம் கொடுக்கலாம். ஜலதோஷத்துக்கு வெந்நீர் சிறந்த மருந்து. வெந்நீர் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் சுவாசப்பாதை சீராகும். மூச்சு விடுதல் எளிதாகும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சூப் கொடுப்பதோ, ஜூஸ் கொடுப்பதோ கூடாது. மருத்துவர் அவற்றைக் கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தும் பட்சத்தில் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து கொடுப்பதே சிறந்தது.
Also Read:
தேகம் மினுமினுக்கப் பயன்படும் குப்பைமேனி!
கைகளை கழுவுவது
தொற்றினால் உண்டாகும் சளி, இருமல் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே கைகளைச் சுத்தமாகப் பராமரிக்காததுதான். கோவிட் தொற்றை தவிர்க்கவும் இதையே முக்கிய தடுப்பு முறையாகவும் பின்பற்றி வருகிறோம். தொற்று உள்ள ஒரு நபர் தும்முவது, இருமுவது போன்றவற்றின் மூலம் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிகளைப் பரப்புவார். இந்த இடத்தைத் தொடுவதாலும், இந்தக் காற்றை சுவாசிப்பதாலும் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும்.
அலட்சியம் காட்டாதீர்கள்
குழந்தை, தாய்ப்பால் குடிப்பதை தவிர்த்தாலோ, தாய்ப்பால் குடிக்கும் போது சளியால் சிரமப்பட்டாலோ அதை அலட்சியப்படுத்தக் கூடாது. சாதாரண சளி, இருமல் போலத் தெரிவது கூட சில குழந்தைகளுக்கு நிமோனியாவாக மாறக் கூடும். எனவே பெற்றோர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு உடற்பயிற்சி ஆலோசனைகள்!