முத்து போன்ற வெண்மையான பற்களை விரும்பாதவர்கள் இல்லை. அவை வாய் ஆரோக்கியத்தின் அடையாளம் மட்டுமல்ல. உடல் தோற்றத்திற்கும் அழகு சேர்ப்பவை. இருப்பினும் பலர் பற்களில் வெண்மை நிறத்தை தக்க வைப்பதற்கு தடுமாறுகிறார்கள். வயது அதிகரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது இயல்பானது தான். ஆனால் புகைபிடித்தல், மரபணுக்கள் ரீதியான பாதிப்பு, காபி, டீ போன்ற காபின் நிரம்பிய பானங்களை அதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களாலும் பற்கள் நிறம் மாறக்கூடும். பற்களை மெருகூட்ட சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினாலே போதும்.
ஆப்பிள் சிடேர் வினிகர் (Apple cider vinegar)
கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் ஆப்பிள் சிடேர் வினிகரை பற்களை வெண்மையாக்கவும் பயன்படுத்தலாம். சுமார் 200 மில்லி தண்ணீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து மவுத்வாஷ் செய்யலாம். இந்த கலவையை வாயில் ஊற்றியதும் பற்கள் உள்பட வாயின் அனைத்து மூலைகளிலும் படியுமாறு 30 வினாடிகள் வைத்திருக்கலாம். ஆப்பிள் சிடேர் வினிகர் பிளிச்சிங் தன்மை கொண்டது. அதனால் வாயில் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது.
பழத்தோல்கள் (Fruit Skins)
எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற சில பழங்களின் தோல்களில் வைட்டமின் சி மற்றும் டி-லிமோனென் என்ற கலவை நிறைந்துள்ளது. இந்த இரண்டு சேர்மங்களும் பற்களை இயற்கையாகவே வெண்மையாக்கும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் டெண்டிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், பற்களின் கறைகளை நீக்குவதில் 5 சதவிகிதம் டி-லிமோனைன் கொண்ட பற்பசைகள் பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்குவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய பற் பசையை கொண்டு தினமும் பல் துலக்கு பவர்களின் கறைகள் பெருமளவு குறைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் உபயோகம் (Oil Usage)
வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிக்கும் `ஆயில் புல்லிங்' முறையும் பற்களுக்கு நலம் சேர்க்கக்கூடியது. வாய் கொப்பளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பற்களில் மஞ்சள் நிறத்திற்கு வித்திடும் பிளேக் கட்டிகளை நீக்குவதற்கும் உபயோகிக்கலாம்.
சமையல் சோடா (baking soda)
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்ற சமையல் சோடா சிறந்த தேர்வாக அமையும். அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்க உதவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாக்டீரியாவை எதிர்த்து போராடும். பிளேக்கை குறைக்கும்.
வாய் சுகாதாரம் (Mouth Healthy)
பற்களில் மஞ்சள் கறை படிவதை தடுப்பதற்கு வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது தான் முதன்மையானது. தினமும் தவறாமல் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுவது முக்கியமல்ல. அது பற்களை சுத்தமாக பராமரிப்பதற்கு வழிவகுக்க வேண்டும். பற்களின் மஞ்சள் நிறத்தைத் தடுக்க செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும் படிக்க