மழை மற்றும் குளிர்காலம் தொடங்கி விட்டது. சுற்றுப்புறச் சூழலின் வெப்பம் படிப்படியாக குறையும், எனவே உடல் சற்று மந்தமாகவும், ஜீரண சக்தி சற்று குறைவாகவும் இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டும். ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள பூண்டு, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
ஆயுர்வேதம் சொல்லும் ஆரோக்கிய உணவு முறை
- முதலில் நாம் உண்ணும் உணவுகள், அருந்தும் நீர் அனைத்தும் லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
- வீட்டிலேயே நிலவேஷ்பு கஷாயத்தினை காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து குடித்து வர நோய் தொற்று எதுவும் ஏற்படாது. பனியால் தோன்றும் பல நோய்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக்கும்.
- ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு இவற்றை தவிர்த்து காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
- மழைக் காலங்களில் காய்கறிகளையும், கீரைகளையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நீர்ச்சத்து மிக்க காய்கறிகளான வெள்ளரி, பூசணி, புடலை, பீர்க்கன், சுரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
- மண்ணுக்கு அடியில் இருந்து பெறப்படும் உணவுகளையோ அல்லது மண்ணுக்கு மிக நெருக்கத்தில் உள்ள காய்களையோ தவிர்த்து மண்ணிலிருந்து உயரத்தில் வளர்ந்து இருக்கக்கூடிய கீரைகளையோ காய்கனிகளையோ பயன்படுத்த வேண்டும்.
- நம் அன்றாட உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம் போன்றவற்றை சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- மதிய உணவுடன் அவ்வபோது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடுங்கள். இது செரிமானத்திற்கு உதவுவதுடன் ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை அருகில் வர விடாது.
- மோர் தவிர இதர பால் பொருட்களான தயிர், வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும்.
- மழைக் காலங்களிலும் பழங்கள் சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். எல்லா சீசனுக்கும் பொருத்தமான பழங்களை தேர்தெடுத்து உண்ண வேண்டும். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, சிட்ரஸ் சத்து நிறைந்த எலுமிச்சம், ஆரஞ்சு போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
- இரவு தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூட்டில் குடிப்பது நல்லது.
- அசைவ உணவாக இருப்பின் பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து நீராவியில் தயார் செய்யும் உணவு பதார்த்தத்தை உண்ணுங்கள்.
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் சமயலறையில் தான் உள்ளது. மழை காலமோ, பனி காலமோ முறையான உணவு பழக்கம் பல நோய் தொற்றுக்களை தவிர்த்து விடும் என்பது திண்ணம்.
Anitha Jegadeesan
Krishi Jagran