உலக நாடுகளில் வல்லரசான அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ளக் கொரோனா வைரஸ், குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.
3-வது அலை
உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாகக் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா 3- வது அலையாக வரும்போது, குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த வகையில்,உருமாறிய வடிவில் உலகில் வலம் வரும் கொரோனா தற்போது தீவிர வேகம் எடுத்துள்ளது.
அதிர்ச்சியில் அமெரிக்கா (America in shock)
யாரும் எதிர்பார்க்காத விதமாக, கிடுகிடுவென தொற்றுப்பரவலை அதிகரித்து வருகிறது. தற்போது உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பாதிப்பு (Vulnerability to children)
அதிலும் தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், முகக்கவசம் அணியவும் நோய் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது.
மருத்துவமனைகளில் கூட்டம்
இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருப்பதாவது:
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் விகிதம் 1 லட்சத்திற்கு 2.5 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை தற்போதுஒரு லட்சத்துக்கு நான்கு குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். 12 முதல் 18 வயதினரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோரும், 5 முதல் 11 வயதினரில் 16 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஜார்ஜியா, கனெக்டிகட், டென்னசி, கலிபோர்னியா, ஓரிகான் ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்ட குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் உள்ளனர்.
பாதிப்பு குறைவு (Less vulnerability)
டெல்டா வகையுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரானில் நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் வெவ்வேறு பிரச்னைகளுக்கு வந்தவர்கள்.
அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் கிடைத்துள்ளன. அதற்காக அவர்கள் கொரோனாத் தொற்றுப் பரவலுக்காக மருத்துவமனையில் உள்ளார்கள் என கருதக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!