இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் முக்கியமானப் பிரச்சனை முடி உதிர்வது. இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், தலைமுடி முறையான பராமரிப்பு இவர்களிடத்தில் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. இது தவிர்த்து, அனைவரும் எதிர்கொள்ளும் மற்றுமொரு தலைமுடிப் பிரச்சினை பொடுகுத் தொல்லை. இது ஒரு வகையான பூஞ்சைத் தொற்றாகும். இது உச்சந் தலையை சேதப்படுத்தி, முடி உதிர்வையும் ஏற்படுத்துகிறது.
பொடுகுத் தொல்லைக்கான காரணங்கள்
பொடுகுத் தொல்லை ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான காரணங்கள் என்றால் ஒழுங்கற்ற முடி பராமரிப்பு, தவறான முறையில் முடி கழுவுதல், பார்கின்சன், மன அழுத்தம் மற்றும் தவறான ஷாம்பு அல்லது ஷாம்பூவைப் பயன்படுத்தாமல் இருப்பதாகும். இதனை ஆரம்பத்திலே தடுப்பது தான் மிகவும் நல்லது. அவ்வகையில் பொடுகை போக்க கூடிய ஒரு சில எளிய வழிமுறைகளை இங்கே காண்போம்.
பொடுகைப் போக்க டிப்ஸ்
2 டீஸ்பூன் சூடான தேங்காய் எண்ணெயுடன், சம அளவில் எலுமிச்சை சாற்றை கலக்கி கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலையில் மெதுவாக மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி வர வேண்டும்.
2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை, 10 முதல் 15 புதிய வேப்ப இலைச் சாறுடன் கலக்கி கொள்ள வேண்டும். மென்மையான இந்தக் கலவையை உங்கள் உச்சந் தலையில் மற்றும் தலைமுடியிலும் தடவிய பிறகு, 30 நிமிடங்கள் வரை அப்படியே வேண்டும். இப்போது பொடுகை எதிர்க்கும் ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
சுமார் 2 டீஸ்பூன் வெந்தய இலைகள் அல்லது விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் ½ டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை உச்சந் தலை மற்றும் தலைமுடி மீது தடவி 30 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். ஒரு நல்ல பொடுகை எதிர்க்கும் ஷாம்பூ போட்கொண்டு, முடியை அலச வேண்டும். பின்னர் கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்க வேண்டாம்.
50 மில்லி பாதாம் எண்ணெயுடன், 2 துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கலந்து கொண்டு, உச்சந் தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பின்னர், ஷாம்பூ போட்டு தலைமுடியை அலசினால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு வாழைப்பழத்தை மசித்துக் கொண்டு, சில துளிகள் எலுமிச்சை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்தக் கலவையை உச்சந் தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி வருவது நல்லதாக அமையும்.
மேலும் படிக்க
இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் மிகச் சிறந்த உணவுகள் இவை தான்!