தமிழகத்தின் உணவு பழக்க வழக்கங்களில் பண்டயங்காலங்களிலிருந்தெ ஊறுகாய் நம் உணவு முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் அனைவரும் பொதுவாக எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை ருசித்து சாப்பிட்டிருப்போம் . புதியதாக சுவைக்க விரும்புவோர் சிக்கன் ஊறுகாயை செய்து பார்க்கலாம், இதை பதப்படுத்த எந்த பக்குவமும் தேவையில்லை, மேலும் அசைவம் இல்லாமல் சாப்பிட விரும்பாதவர்கள் இதை செய்து வைத்துக்கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போது இந்த சுவையான பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சிக்கன் ஊறுகாயின் செய்முறையை பின்வருமாறு காண்போம்.
பொரிப்பதற்குத் தேவையான பொருட்கள்:
- போன்லெஸ் சிக்கன் - 500 கிராம்
- மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி
- மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் - ¼ கப்
- கடுகுத்தூள் - 1 மேசைக் கரண்டி
- வெந்தயத்தூள் - ¼ தேக்கரண்டி
- எலுமிச்சம்பழம் - அரை மூடி
தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்:
- எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- உலர்ந்த மிளகாய் - 5
- கறிவேப்பிலை - 10
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், சுத்தம் செய்த போன்லெஸ் சிக்கன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த போன்லெஸ் சிக்கனை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை நன்கு வேகவைத்து பொரித்து எடுக்கவும்.
வேறொரு கடாயில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இந்த மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
வேறொரு கடாயில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிறகு, அதை சூடு தணியும் வரை ஆறவைக்கவும். பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து நீங்கள் இதனை பரிமாறலாம்
சாதம், தோசை, இட்லி என அணைத்து உணவுகளுடன் இது ஒரு கலக்கல் காம்பினேஷனாக இருக்கும்.
மேலும் படிக்க