வேளா வேளைக்குச் சாப்பிடாமல், பசி எடுக்கும் போது மட்டும் உணவு அருந்தி வந்தால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம், என்று இயற்கை மருத்துவர் திவ்யா பிரியதர்ஷினி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இயந்திரமயமான வாழ்க்கையில், அமர்ந்து சாப்பிடக்கூடா இங்கு பலருக்கு நேரமில்லை. அலுவலகத்திற்கு தாமதமாகாமல் செல்ல வேண்டும் என்பதற்காக, காலை உணவை ஸ்கிப் செய்பவர்கள் நம்மில் ஏராளனம். இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். ஆனால், வேளா வேளைக்கு உணவு சாப்பிடக்கூடாது என்று மாற்றுக் கருத்தை வெளியிட்டுள்ளார் இயற்கை மருத்துவர் திவ்யா பிரியதர்ஷினி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சினைப்பை நீர்க்கட்டி போன்ற வாழ்க்கை முறைகளால் வரும் நோய்களுடன் வருவோரிடம், அவர்களின் உணவு, பழக்கவழக்கம், வேலை போன்ற தினசரி நடவடிக்கைகளை கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல, உணவு முறைகளை பின்பற்ற அறிவுறுத்துகிறோம்.உடற்பருமன் பிரச்னைக்கு, அதற்கு மட்டுமன்றி, முழு உடலுக்குமே சிகிச்சை அளிக்கப்படும்.
அதிகரிக்கும் நம்பிக்கை
இதனால், உடற்பருமன் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.அலோபதி மருந்து சாப்பிடுவோர், அந்த மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கை மருத்துவத்தைப் பின்பற்ற தயங்குவர். அவர்களை, அலோபதி மருந்து உட்கொண்டபடியே, இயற்கை மருத்துவத்தை பின்பற்ற ஆலோசனை வழங்குவோம். காலப்போக்கில், இயற்கை மருத்துவத்தின் மீது நம்பிக்கை அதிகரித்து, ஆங்கில மாத்திரைகளை தவிர்த்து விடுவர். நேச்சுரோபதியின் தத்துவமே, உடல்மொழியைக் கேளுங்கள் என்பதுதான்.உதாரணமாக, நேரத்துக்கு சாப்பிடாதீர்கள் என்கிறோம்.
செய்ய வேண்டியவை
-
உணவு இடைவேளை என்பதற்காக உண்ணக்கூடாது.
-
பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்.
-
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட்டுப் பழகிவிட்டு, அதே நேரத்துக்கு பசித்தால், அது உளவியல் சார்ந்த பசி.
-
அதைத்தவிர்த்து, ஏற்கெனவே உண்ட உணவு செரித்து, உடலியல் ரீதியான பசி எடுக்கும்போதுதான், உண்ண வேண்டும்
-
துாக்கம், பசி, தாகம், ஓய்வு என்ற உடலின் நான்கு மொழிகளை கவனித்துப் புரிந்து, தேவையானதைக் கொடுத்து வந்தால், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
-
மனச்சிக்கல் இன்றி உறங்கி, மலச்சிக்கல் இன்றி விடிந்தால், ஆரோக்கியத்துக்கு ஒருபோதும் குறையிருக்காது.
-
தண்ணீரை அமர்ந்து, நிதானமாக அருந்த வேண்டும், அவசரமாக அருந்தக் கூடாது.
உடலின் மொழி
இயற்கை மருத்துவம் என்பது, வாழ்வியல் நடைமுறை, உணவு மாற்றம், யோகா என, பக்கவிளைவுகளற்ற வகையில் சிகிச்சை அளிப்பதுதான். இதை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலின் மொழியைக் கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...