சித்த மருத்துவம் கூறும் நீரிழிவு நோய்
நோய் வரும் முன்பே மருந்தை கண்டுபிடித்தவர்கள் நம் சித்தர்கள். அவர்களின் ஆழ்ந்த ஞானத்தை கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வரவிருக்கும் பிணியயையும், அறிகுறிகளையும், பிணிக்கான தீர்வையும் கொடுத்து சென்றுள்ளனர். இன்று நாம் வைத்த பெயர் தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய். சித்தர்கள் வைத்த பெயர் மது மேக நோய்.
ஒரு 30 வருடங்களுக்கு முன்னால் வரை வயோதிகர்களை மட்டுமே பாதித்த இந்த நோய் இன்று அனைவரையும் தாக்கி இருப்பது மிகவும் வருந்த தக்கது. முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் இன்று நம்மில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக உள்ளது. எனினும் சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தரமான தீர்வு இருப்பதாக கூறப்படுகிறது.
சர்க்கரை நோய்
முதலில் நாம் சர்க்கரை நோய் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள சத்தை ஆற்றலாக மாற்றுவதற்கு கணையத்திலிருந்து கணைய நீர் சுரக்கிறது. அவ்வாறு சுரந்த கணைய நீர் சீராக ஆற்றலாக மாற்றாமல் அது சர்க்கரைச் சத்தாகவே ரத்தத்துடன் கலந்து விடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய் உருவாகிறது.
நோயின் அறிகுறிகள்
சித்தர்கள் மது மேக நோயிக்கான அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளனர்.
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
தொடர்ந்து கொழுப்புச் சத்து கொண்ட உணவை உட்கொண்டு, உடல் உழைப்பு இல்லாது இருந்தால் இந்நோய் உண்டாகும் எனவும், இதனால் பாலுறவில் நாட்டம் இருக்காது என குறிப்பிடப் பட்டுள்ளது.
நீரிழிவு நோய் ஏற்பட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சித்தர்கள் உடலில் தோன்றும் நோயினை வாதம், பித்தம், கபம் என மூன்று வகைகளில் பிரித்துள்ளனர். அவரவர்களின் உடற்கூற்றுக்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் என்றுள்ளார்.
மது மேக நோய்க்கான தீர்வு
தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்
மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ - அகத்தியர் குணவாகடம்
பொருள் - நீரிழிவு, வறட்சி, உடலின் வியர்வை நாற்றம் இவற்றைப் போக்கும். உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும்.
சர்க்கரை நோயை தடுக்க பல மூலிகை மருந்துகளை சித்தர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவற்றில், பொன்னாவாரை பூ என்ற ஆவாரம் பூ முதன்மையானதாக கருதப்படுகிறது. பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய ஆவாரம் பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வெளிப் பூசவும், உள் பயன்பாட்டிற்கும் பயன் படுத்தலாம். இந்த மரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. இதன் இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என அனைத்தும் மருத்து தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆவாரம் பூ கஷாயம்
பொன்னாவாரை பூ - 10 கிராம்
மிளகு - 5
திப்பிலி - 3
சுக்கு - 1 துண்டு
சிற்றரத்தை - 1 துண்டு
மேலே கொடுத்துள்ளவற்றை உலர்த்தி பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்சி காலை வேளைகளில் வெறும் வயற்றில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மதமதப்பு, உடல் அசதி, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் மட்டுப்படும்.
Anitha Jegadeesan
Krishi Jagran