‘ஆலிவ்’ என்கிற வார்த்தை சமீப காலமாக நமக்கிடையில் ஒலிப்பதாக நினைக்கும் நிலையில், இந்த எண்ணெயை பழங்காலத்தில் இருந்தே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பழங்கால மக்கள் ஆலிவ் எண்ணெயை ‘திரவ தங்கம்’ என்று அழைப்பர். தமிழில் இடலை எண்ணெய் என்று கூறப்படும் இந்த எண்ணெய், பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இடலை எண்ணெயானது நீங்கள் நினைப்பது போல், சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. சரும பிரச்சனைக்கும், தலைமுடி பிரச்சனைகளுக்கும் இது பயனளிக்கிறது. இப்படி பல்வேறு விஷயங்களுக்கு பலனளிக்கும் இந்த ஆலிவ் எண்ணெயின் வகைகள், நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம் வாருங்கள்.
ஆலிவ் எண்ணெயின் வகைகள்
ஒலியா யூரோபியா எனும் அறிவியல் பெயர் கொண்ட, ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆலிவ் எண்ணெய், ஆலிவ் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆலிவ் எண்ணெய்யின் வகைகள் குறித்து பார்ப்போம்.
விர்ஜின் ஆலிவ் ஆயில்
ஆலிவ் எண்ணெயின் மிக பிரபலமான, எல்லோராலும் அறியப்பட்ட ஒரு வகை விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகும்; இது குறைந்த அமிலத்தன்மை கொண்டது. அதிகம் செலவழிக்காமல், ஆலிவ் எண்ணெயின் அத்தனை நன்மைகளையும் பெற இந்த வகை சிறந்தது.
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில்
குளிர் அழுத்துதல் செய்யப்பட்ட ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் உடலுக்கு நல்லது என கருதப்படுகிறது. ஆனால், இது சற்று அதிக விலையுயர்ந்தது. எல்லோராலும் வாங்க முடியாத விதத்தில் இதன் விலை அமைந்துள்ளது.
தூய ஆலிவ் ஆயில்
இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆகியவை கலந்த கலவையாகும். இதில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இது பயன்படுத்த உகந்ததல்ல.
லம்பாண்டே ஆலிவ் எண்ணெய்
இந்த வகை எண்ணெய் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது சமையலுக்கு ஏற்றதல்ல.
சருமத்திற்கு நன்மை பயக்கும் ஆலிவ் எண்ணெய்
- முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் போன்றவை மறைய ஆலிவ் எண்ணெய் கொண்டு தினமும் இரவில், முகத்தில் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன்களை பார்க்க முடியும். ஆலிவ் எண்ணெயில் இருக்கக்கூடிய வைட்டமின் இ மற்றும் ஏ சத்துக்கள் முகத்தின் அழகை பாதுகாத்து, மேம்படுத்த உதவுகிறது.
- ஆலிவ் ஆயிலினை தினமும் சருமத்தில் தடவி, மசாஜ் செய்து வரும் நிலையில், அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து, தோலில் உள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து, சருமத்தை மிளிரச் செய்யும்.
- உதடுகளை வெடிப்புகளின்றி, அழகாக வைத்திருக்க, பொடித்த நாட்டு சர்க்கரை ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய், சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, தூங்க போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் இக்கலவையை உதட்டில் தேய்த்து கொள்ளவும். இது வெடிப்புகளற்ற உதடுகளை பெற உதவும்.
- 2 தேக்கரண்டிகள் ஆலிவ் எண்ணெய், ⅓ கப் யோகர்ட், ¼ கப் தேன் ஆகியவற்றை கலந்து, அடர்த்தியான திரவத்தை உருவாக்கி, சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் சருமத்தை மிதமான சூடு தண்ணீர் கொண்டு கழுவவும். இது சருமத்தில் ஏற்படும் அழற்சி, முகப்பரு, போன்றவற்றை குணப்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- தலையில் ஆலிவ் ஆயிலை தேய்த்துவர முடி உதிர்தல் குறையும், பொடுகைக் கட்டுப்படுத்தும். அதோடு, முடியை பளபளப்பாக்கி, அதன் வளர்ச்சியை தூண்டும்.
ஆலிவ் ஆயிலின் மருத்துவ குணங்கள்
- ஆலிவ் ஆயிலில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் உள்ள லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.
- ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை குறைகிறது.
- வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் ஆயிலுக்கு உண்டு.
- தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.
- இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளை தாக்குவதை தடுக்கிறது.
- ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலேயுரோபின் எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும்.
- தினமும் ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது, அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கிறது.
- சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும்.
M.Nivetha
nnivi316@gmail.com