கோடைகாலம் துவங்கிய நிலையில் மக்கள் வெப்பத்தை சமாளிக்க இயற்கையாக விளையக் கூடிய தர்பூசணியினை உண்ணத் தொடங்கியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவ்ரும் இதனை உண்ணலாம். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப இதனை பழச்சாறு, ஐஸ் கிரீம் என தயாரித்து கொடுக்கலாம். இருப்பினும் நம்மில் பலருக்கு எவ்வாறு வாங்குவது என்று தெரியாது. எத்தனை வகைகள் உண்டு என்பது தெரியாது. உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் இந்த பதிவு
ஆண் தர்பூசணி, பெண் தர்பூசணி வகைகள்
தர்பூசணி பழங்களில் ஆண், பெண் என இரண்டு வகைகள் உள்ளது. நீள வடிவில் இருப்பது ஆண் தர்பூசணி, உருண்டை வடிவில் காணப்படுவது தான் பெண் தர்பூசணி என்று கூறப்படுகிறது. ஆணை விட பெண் தர்பூசணி தான் நிறம், சுவை ஆகியன அதிகமாக இருக்கும். அதே போல் தர்பூசணி பழத்தினை வாங்கும் பொழுது, நன்கு புதிதாக பச்சையாக உள்ள காம்பு கொண்ட பழங்களை வாங்குவதைவிட, பழம் பச்சையாகவும் காம்பு மட்டும் நன்கு காய்ந்து போய் இருக்கும் பழமாகத் தேர்வு செய்து வாங்க வேண்டும். அதுதான் நன்கு பழுத்த, சுவையான பழமாக இருக்கும்.
தர்பூசணி பழத்தினை வாங்கும் முறைகள்
மஞ்சள் நிற தர்பூசணிகள் வெளி மாநிலங்களிலிருந்து இங்கு விற்பனையாகின்றன. ஆனால் பச்சை நிறத்தில் வரி வரியாக இருக்கும் தர்பூசணியே உடலுக்கு நல்லது. தர்பூசணி வடிவங்களை உற்றுபார்த்தால் வித்தியாசம் தெரியும். தர்பூசணி பெரியதாக இருந்தால்தான் அது சுவையாக இருக்கும் என்றெல்லாம் கிடையாது. நடுத்தரமான பழங்களே நன்றாக இருக்கும். தர்பூசணியின் வால் பகுதி உலர்ந்து இருந்தால் அந்தப் பழம் பழுத்திருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். பச்சை நிற தர்பூசணிதான் உள்ளே சுவையாக இருக்கும் என்று நினைப்பது தவறு. சற்று பிரவுனாக இருக்கும் தர்பூசணி பழங்களே சுவை மிகுந்தவை. தர்பூசணியில் புள்ளிகள் மஞ்சளாக இருந்தால் உள்ளே பழமாக இருக்கிறது என்று அர்த்தம். வெள்ளையாக இருந்தால் பழமாகவில்லை என்று அர்த்தம்.
நன்மைகள் பயக்கும் வாட்டர் மெலான்
- தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் உள்ள அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.
- கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறையும். அதனை இப்பழம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.
- தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டு வர மலசிக்கல் தீரும்.
- நமது உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவைகள் தர்பூசணியில் உள்ளதால், இது உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.
- தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும்.
- தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதோடு, இதயத்துடிப்பை சீராக்கும்.
- ஒரு டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணி விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்றி, அது ஆறிய பின் குடித்து வர, சிறுநீர்க் கற்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.
- தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும், கண்கள் குளிர்ச்சி பெறும். இப்பழ சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின்னர் கழுவ, சருமம் பளபளப்பாகும்.
- தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாகிறது.
- தர்பூசணி லைக்கோபீன் (Lycopene) மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.
- நீர் பழம் என்று கூறப்படும் இதில் கலோரியும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும், எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.