பலாப்பழம் - முக்கனிகளில் இரண்டாவது இடம். பழவகைகளிலேயே மிகப்பெரிய பழமும் இதுவே. பலாவின் தாயகம் இந்தியவானாலும், இலங்கை, மலேசியாவில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேளரா, ஒடிசா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
பலாபழத்தின் வகைகள்
ஊரே மணக்கும் சுவைகொண்ட பலாப்பழம், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். பலாப்பழத்தில் இரு வகைகள் உண்டு. அவை, "வருக்கை பலாப்பழம், கூழன் பலாப்பழம்". இது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
வருக்கை பலாப்பழம் : இதில், பலாச்சுளைகள் அடர்த்தியாக இருக்கும். இந்த பழத்தை கைகளிலான் பிளக்கு முடியாது. கத்தி கொண்டு மட்டுமே வெட்ட வேண்டும்.
கூழன் பலாப்பழம் : இதன் பலாச் சுளைகள் மிக தித்திப்பாக இருக்கும். மணம் அதிக வாசனை திறன் கொண்டது. இந்த பழம் பழுத்துவிட்டால் கைகளினால் பிளக்க முடியும்.
இதே பலாப்பழத்தின் வேறு இரு ரகங்களும் உண்டு. அவை, அயினி பலாப்பழம், கறி பலாப்பழம். "அயினி பலாப்பழம்" - அளவில் மிகச் சிறியதாகஇருக்கும். இது சற்றே புளிப்பு சுவையுடையது. இதன் மரம் பெரும்பாலும் வீட்டின் ஜன்னல், கதவுகள் செய்வதற்கு பயன்படும். "கறி பலாப்பழம்" - இதுவும் சிறியஅளவில் இருக்கும். இதை சமையல் பண்ணபயன்படுத்துவார்கள்.
சத்துப்பேழை – பலாப்பழம் (Jackfruit)
நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில், புரதம் 2.1கிராம், கொழுப்பு 0.2கிராம், மாவுப்பொருள் 19.8கிராம், நார்ப்பொருள் 1.4கிராம், சுண்ணாம்பு சத்து 20மில்லிகிராம், பாஸ்பரஸ் 41மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7மில்லிகிராம், தயாமின் 0.04மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15மி.கிராம், நியாசின் 0.4மி.கிராம் வைட்டமின் "சி" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27மில்லிகிராம், பொட்டாசியம் 19.1மில்லிகிராம், சோடியம் 41.0மில்லிகிராம், தாமிரம் 0.23மில்லிகிராம், குளோரின் 9.1மில்லிகிராம், கந்தகம் 69.2மில்லிகிராம், கரோட்டின் 306மைக்ரோகிராம் ஆகியவை இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, "சத்துப்பேழை" என்று சிறப்பாகச் சொல்லலாம்.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பழம் பெருசுதான். அதேபோல் அதன் மருத்துவகுணங்களும் ரொம்ப ரொம்ப அதிகம் தான். வாருங்கள் பார்க்கலாம்...!
வாத பித்த கபத்தை நீக்கும் பலா பிஞ்சு!
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும். நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கி உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும் எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
பலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுங்கள் அப்போது வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் பலா!
பலாவில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, ரத்ததில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையுடையவை. தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும். இதற்கு ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டாலே போதுமானது.
பார்வை திறனை கூட்டும் பலா!
பலாவில் வைட்டமின் “A” நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
கேன்சர் நோய் (Cancer Disease) தடுக்கும் பலா!
இப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள நோய் பாதிக்கப்பட்ட செல்களினால் ஏற்படும் நோயான கேன்சர் (cancer disease) உண்டாவதை தடுக்கும்
தைராய்டு பிரச்சனைகள் (Thyroid Issues)
நமது தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி, ஒரு நாளமில்லா சுரப்பி.. இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. இப்பழத்தை அதன் சீசன் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில்(Thyroid Issues) ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.
ரத்தசோகை தீர்க்கும் பலா!
நம் உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் மெக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.
இரத்த அழுத்தை (Blood pressure) சீராக்கும் பலா!
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக கட்டுக்குள் வைக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம் (High blood pressure), பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். பலாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சாப்பிடலாம்.
குடல் புற்றுநோய் தீர்க்கும் பலா!
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இதயம்
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம். நெய் அல்லது தேன் கலந்து பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும்.
சர்க்கரைநோய் (Diabetes)
கனிந்த பலாபழத்தை அப்படியே உண்டால் அது சர்க்கரையின் அளவை கூட்டிவிடும்.கனியாத காயாக உள்ள பலா பிஞ்சுவை சமைத்து சாப்பிட்டால் அதனால் எந்த வகையிலும் சர்க்கரையின் (diabetes) அளவு கூடாது. மாறாக சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்கும். கனியாத பலாவில் மிகவும் குறைந்த அளவே கிளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) உள்ளது. அதனால், இதனை சர்க்கரை நோயாளிகளும் எடுத்து கொள்ளலாம்.
இந்த கோடை சீசன் மாம்பழத்திற்கு மட்டும்மல்ல... பலாப் பழத்திற்கும் தான்.. பலாபழமும் பெருசுதான் அதன் மருத்துவ குணமும் பெருசுதான்.. வாங்க கொஞ்சமா சாப்பிட்டு நிறைய பலன் பெறலாம்!