Health & Lifestyle

Wednesday, 01 January 2020 05:54 PM , by: KJ Staff

வெந்தயக்கீரை என்பது வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கீரை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.

இந்த கீரையினை பயிரிட சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஏற்றவை. நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள், செம்மண் நிலங்கள் இந்த செடியினை பயிரிட உகந்தது. வெந்தயத்தின் மூலம் பெறப்படும் இந்த கீரை மூன்று மாதங்களில் நன்றாக வளர்ந்து பயனை அளித்து விடும் என்பது குறிப்பிடவேண்டியவை.

வெந்தயக்கீரையை பயிரிடும் முறை 

இந்த வகை கீரையினை பயிரிட தேர்வு செய்த நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும் என்கிற நிலையில், கீரை விதைகளை மணல் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.

கீரை செடி வளரும் முறை

இந்த கீரை விதைக்கப்பட்ட 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதன் மூலம் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும். விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சுவது அவசியம். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின் மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். இது விதைக்கப்பட்ட  6ம் நாளில் முளைவிடும். பத்து நாட்கள் கழித்து களைகளை நீக்கி விடுகையில், அதிகப்படியான செடிகளை களைக்க வேண்டும்.

கீரை செடியினை பாதுகாக்க செய்ய வேண்டியவை

கீரைகளில் பூச்சுகள் தாக்காமல் இருக்க,  இஞ்சி,  பூண்டு,  பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்து வர, பூச்சிகள் தாக்காது. இவ்வாறான முறைகளை கையாண்டு செடி நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில், விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறித்து விற்பனை செய்ய வேண்டும்.

100 கிராம் வெந்தயக்கீரைச்சாறில் உள்ள சத்துகள்

நீர் - 82%,

மாவுப்பொருள் - 9%

புரதம் - 5%

கொழுப்பு - 0.9%

தாது உப்புக்கள் - 1.6%

கால்சியம் - 0.47%

பாஸ்பரஸ் - 0.05%

இரும்புத் தாது - 16.9 யூனிட்

வைட்டமின் A - 3900 யூனிட்

வைட்டமின் B - 70 யூனிட்

வைட்டமின் C - 52 யூனிட்

பொட்டாசியம் - 31 யூனிட்

சோடியம் - 76 யூனிட் .

வெந்தயக்கீரையினை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா??

  • இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
  • வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
  • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, காசநோயும் குணமாகும் என்று கூறப்படுகிறது. உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். குடல் புண்கள் நீங்கும்.
  •  வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாவதோடு, உடல் முழுவதுமே சுத்தமாகும்.
  • வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும்.
  • இக்கீரை மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் குணமாக்குகிறது.
  • நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி நீங்கும்.
  • வெந்தயக்கீரையினை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண்,  வாய்ப்புண் ஆகியவை ஆறும்.

M.Nivetha
nnivi316@gmail.com

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)