திருப்பூர் மாவட்டம் உடுமலையில், அண்மைகாலமாக இரட்டைக் கரு முட்டைகள் விற்பனை அதிரடியாக அதிகரித்துள்ளது. அசைவப்பிரியர்கள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
தமிழகத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பகுதியில், முட்டைக்கோழி வளர்ப்பு பண்ணைகள் அதிகம் உள்ளன. இதேபோல், உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
அதேநேரம், ஆங்காங்கே முட்டைக்கோழி வளர்ப்பு பண்ணைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அங்கு, 18 வாரம் வயதான கோழி, முட்டை உற்பத்திக்கு பண்ணையில் விடப்படுகிறது.அந்தக் கோழி தொடர்ந்து, 72 வாரம் வரை முட்டையிடுகிறது.
அதன் பின்னர், இறைச்சிக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, தினமும், ஒரு கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்னர், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள முட்டை டீலர்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன.இப்பண்ணைகளில் உள்ள கோழிகள், சில சமயங்களில் இரு மஞ்சள் கரு உள்ள முட்டைகளை இடுகின்றன.
அவை, மார்க்கெட்டில், 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவற்றை வாங்க, அசைவப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமோக விற்பனை
கால்நடைத்துறையினர் கூறியதாவது: சமீபகாலமாக, விற்பனையாளர்கள் சிலர், இரட்டைக்கரு முட்டைகள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவை, சாதாரண முட்டையை விட, அளவில் சற்று பெரிதாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இரட்டைக் கரு முட்டைகளை கேட்டு வாங்குகின்றனர். ஓட்டல்களிலும், இதுபோன்ற முட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள் இந்த முட்டைகளை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேநேரம், குழந்தைகள் உட்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...
மாரடைப்பைத் தடுக்கும் பழம்- தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்!