முழுமுதற் கடவுளாம், கணேசனின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இவ்விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த 7 அடி விநாயகர் சிலை காணாமல் போனது, பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
7 அடி விநாயகர் சிலை
இதனிடையே குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகே அண்ணா தெரு பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சேர்ந்து 7 அடி விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.
இன்று காலையில் பார்த்த போது அங்கு சிலை இல்லை. சிலை காணாமல் போனது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.சிலை வைத்த இடத்திலிருந்து சுமார் 10 அடி தொலைவில் சிலையின் கை மற்றும் தும்பிக்கை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்த பொழுது அதில் மூன்று இளைஞர்கள் விநாயகர் சிலையை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க...