சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம்மில் பலருக்கும் அடிப்படை விருப்பமாக இருப்பது நோய்யற்ற வாழ்வு, ஆம் இன்றைய நவீன உலகில் நமது ஆரோக்கியத்திற்கு சவாலாக பல காரணிகள் இருந்து வருகின்றன. விளைவு சிறு வயதியிலேயே இதய நோய், சர்க்கரை வியாதி என சொல்லிக்கொண்டே போகலாம். 'அதிவேக உணவு ஆபத்து' என்ற ஒரு மொழி பழங்காலத்தில் உண்டு.
உடலை ஆரோக்கியமாகவும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் வைக்க வேண்டும். உடலின் வெளி புறத்தை சோப்பு, போன்றவைகளை பயன்படுத்தி, சுத்தமாக வைத்து கொள்கிறோமோ அதே போன்று உள்ளிருக்கும் கழுவுகளை முறையாக வெளியேற்றி, அக உறுப்பையும் சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகும்.
அக ஆரோக்கியத்தை மேம்படுத்த சாத்வீக உணவு வகைகளான பழரசங்கள், மூலிகைச்சாறு, காய்கறிகள் போன்றவற்றை உட்கொண்டால் அக கழிவு வெளியேறுவதோடு, உடல் வெப்பம் தணியும். மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு சித்தர்கள் ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு மற்றும் அவற்றால் உண்டாகும் பலன்கள் குறித்தும் குறிப்புகளை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர்.
திங்கள் – அருகம்புல்
வாரத்தின் முதல் நாள் ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு நமக்கு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளரக வற்றியதும் காலை வேளைகளில் குடிக்க வேண்டும்.
ஆரோக்கிய பலன்கள்
- சோர்வின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க முடியும்.
- குறட்டை சத்தம், மலச்சிக்கல், மூட்டு வலி அகலும்.
- சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
- தலை முடி உதிர்வுக்கு நல்ல தீர்வாகும். நன்கு முடி வளருவதுடன் இளநரை நீங்கும்
- இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும்.
- பெண்களுக்கு இரத்த சோகை நீங்கி, கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
செவ்வாய் – சீரகம்
சித்த மருத்துவத்தில் சீரகத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் வற்றிய பின்பு மிதமான சூட்டில் பருக வேண்டும்.
ஆரோக்கிய பலன்கள்
- சீரகம் குளிர்ச்சி என்பதால் கண், வயிறு எரிச்சல் நீங்கும்.
- அஜீரணம், பித்தம், மந்தம், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
- இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் .
- வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும்.
- தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் இதை பருகினால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
புதன் – செம்பருத்தி
அகத்தையும், புறத்தையும் அழகுற செய்யும் மலர்களில் செம்பருத்தி பூவும் ஒன்று. காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இரண்டு செம்பருத்தி பூ இதழ்களை இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
ஆரோக்கிய பலன்கள்
- பெண்களுக்கு மிகவும் ஏற்ற சாறு. இது மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, கர்ப்பப்பை கோளாறு போன்றவையாவும் சரியாகும்.
- இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு இவ்விரண்டுக்கும் செம்பருத்தி சாறு உதவும்.
- தலை முதல் அடிவரை பளபளப்பாகும், குறிப்பாக முகம் பொலிவு பெறுவதுடன், கேசம் நன்கு நீளமாக வளரும்.
- இதயம் சம்பந்தமான நோய் போன்றவை நீங்கிவிடும்.
வியாழன் – கொத்துமல்லி
கொத்துமல்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. பித்ததால் அவதிப்படுபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அருமருந்து. ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
ஆரோக்கிய பலன்கள்
- நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், உடல் அசதி போன்றவை குறையும்.
- வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
- அஜீரணம், பித்தம், இளநரை ஆகியவை படிப்படியாக நீங்கும்.
வெள்ளி – கேரட்
கேரட் சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். இதை முறையாக சித்தர்கள் கூறியது போல தயாரித்து பருகினால் புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியமும் கிடைக்கும். ஒரு கேரட் (சிறியது), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
ஆரோக்கிய பலன்கள்
- கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
- உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை கனிசமாக உயர்த்தும்.
- மஞ்சள் காமாலையில் இருந்து விரைவில் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.
- ஆண், பெண் என இருபாலரும் மலட்டுத் தன்மையை சரி செய்ய இதை பருகலாம்.
சனி – கரும்பு சாறு
ஆண்டு முழுவதும் கிடைக்க கூடிய இந்த கரும்பு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. கரும்பு சாறு தயாரிக்கும் போது அத்துடன் இஞ்சியோ, எலுமிச்சையோ, ஐஸ்சோ சேர்க்காக கூடாது. ஒரு டம்ளர் அளவு மட்டுமே குடிக்க வேண்டும்.
ஆரோக்கிய பலன்கள்
- உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் என அனைத்தையும் வெளியேற்றும் ஆற்றல் பெற்றது.
- கழிவுகள் வெளியேறும் போது ஏற்படும் துர்நாற்றத்தை போக்க கூடியது.
- மலச்சிக்கல், உடல் பருமன், தொப்பை என எல்லாவற்றிற்கும் ஏற்ற அருமருந்து.
ஞாயிறு – இளநீர்
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று. சுத்தமான மற்றும் சுவையான நீர் என அனைவராலும் கூறப்படும் இந்த இளநீரை ஒரு டம்ளர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
ஆரோக்கிய பலன்கள்
- பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் காலை நேரங்களில் வெறும் வயிற்றில் குடிக்க, உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.
- சர்க்கரை நோயாளிகள் இதை குடித்து வந்தால் இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.
- இரத்தக் குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.
- சிறுநீரகத்தை சுத்திகரிப்பதுடன், சிறுநீரகக் கல் கோளாறு, குடல் புழுக்களை அழிக்கிறது. மேலும் மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று பிரச்சனைகளை சரி செய்யும்.
Anitha Jegadeesan
Krishi Jagran