தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
தயிரில் விட்டமின் பி12 (கோபாலமைன்), பி2 (ரிபோஃப்ளோவின்) ஆகியவை அதிகம் உள்ளன. இதில் விட்டமின் பி1 (தயாமின்), பி3 (நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை உள்ளன.
மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், செலீனியம் ஆகியவை அதிகளவு உள்ளன. மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.
இதில் கார்போஹைட்ரேட், அதிகளவு புரதம் ஆகியவை உள்ளன.
தயிரின் மருத்துவப் பண்புகள்
தயிரானது புரதம், கால்சியம், நல்ல பாக்டீரியா ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் இது சூப்பர் உணவு என்று அழைக்கப்படுகிறது.
நல்ல செரிமானத்திற்கு
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்கின்றன. இப்பாக்டீரியாக்கள் ஆரோக்கியமான செரிமானப்பாதை மற்றும் செரிமானக் காரணிகளை ஊக்குவிக்கிறது.
தயிரானது பாலினைவிட அதிகளவு புரதத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில் காணப்படும் புரதமானது எளிதில் செரிக்கும் பாதி சிதைக்கப்பட்ட புரதமாகும். எனவே தயிரானது பாலினைவிட எளிதில் செரித்துவிடும்.
தயிரில் உள்ள புரோபயோடிக் பொருளானது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல்புற்றுநோய், குடல் அழற்சி நோய்கள், அல்சர் உள்ளிட்ட செரிமான நோய்களைப் போக்குகிறது. எனவே தயிரினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு
தயிரானது அதிக கால்சியத்தையும், பாஸ்பரஸையும் கொண்டுள்ளது. மேலும் இதில் காணப்படும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
ஆஸ்டியோபோடீராஸிஸ், வாதநோய் போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் இதனை உண்பதால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
போதுமான கால்சிய நுகர்வு வயதான பெண்களிடம் ஏற்படும் எலும்பு தேய்மானம், வலுவற்ற எலும்புகள் ஆகியவற்றிலிருந்து தயிரானது பாதுகாப்பினை அளிக்கும்.
எனவே தயிரினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்பாடு அடையச் செய்யலாம்.
நோய் தடுப்பாற்றலைப் பெற
தயிரில் உள்ள புரோபயோடிக் பொருளானது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றது. தொற்று நோய்கள், அழற்சி மற்றும் ஒவ்வாமை ஆகியவைவற்றை இது போக்குகின்றது.
தயிரினை வழக்கமான உணவாக உட்கொள்ளும்போது அவை டி செல்களை பலப்படுத்தி வலுவான நோய் தடுப்பாற்றலை உடலுக்கு வழங்குகின்றது. தயிரினை ஒவ்வொரு நாளும் உண்ணும்போது சளித்தொல்லை தள்ளிப்போகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக வைக்க
தயிரானது குறிப்பிட்டளவு பொட்டாசியத்தைக் கொண்டுள்ளது. பொட்டாசியம் உள்ள உணவினை உண்ணும்போது சோடியத்தை மீண்டும் உறிஞ்சுதல் தடைசெய்யப்பட்டு உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு இதயம் பலப்படுத்தப்படுகிறது. தயிரினை தினமும் உணவில் சேர்க்கும்போது இரத்த அழுத்தம் சீராக வைக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றத்தைப் போக்க
தயிரினைக் கொண்டு இயற்கையான முறையில் வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். தயிரினைப் பயன்படுத்தும் போது 80 சதவீதம் வாய்துர்நாற்றம் போய்விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தினந்தோறும் உணவில் தயிரினைச் சேர்த்துக் கொள்ளும்போது ஜிங்கிவிட்டிஸ் எனப்படும் ஈறுநோய் மற்றும் பற்குழிநோய் ஆகியவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோயினைத் தடுக்க
தயிரினை அடிக்கடி பயன்படுத்தும்போது பெருங்குடல் புற்றுநோய் தடுக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெருங்குடல் புற்றுநோயால் பாதிப்படைந்தவர்கள் தயிரினை உண்டு நிவாரணம் பெறலாம்.
சருமம் மற்றும் கேசத்தினைப் பராமரிக்க
தயிரினை சருமத்தில் தடவும்போது பருக்கள், சருமத்தில் உள்ள காயங்கள், கரும்புள்ளிகள், சருமத்துளைகள் ஆகியவை மறைந்து சருமம் பொலிவாகிறது. தயிரினை கேசத்தில் தடவும்போது பொடுகு, தலைஅரிப்பு போன்றவற்றிற்கு நிவாரணம் கிடைப்பதோடு கேசம் பளபளப்பாகிறது.
மனநிலைகளை ஒழுங்குபடுத்த
தயிரில் காணப்படும் புரோபயோடிக்குகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆரோக்கியமான குடலின் இயக்கம் மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தயிரினை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது மனக்கிளர்ச்சி, மனக்கவலை இல்லாமல் மனநிலையை சீராக்குகிறது. இதனை அடிக்கடி உணவில் உட்கொள்ளும்போது பார்கின்சன், அல்சைமர், மனஇறுக்கம் போன்ற நரம்புக்கோளாறுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.