ஆரோக்கியமான சருமத்திற்கு
நிலக்கடலையில் உள்ள வைட்டமின் இ மற்றும் பி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பானது சருமச்செல்களைப் பாதுகாப்பதுடன் சருமம் அதனுடைய ஈரப்பதத்தை இழக்காமல் பளபளக்கச் செய்கிறது. எனவே கடலையை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
மனஅழுத்தத்தைக் குறைக்க
மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்க செரோடோனின் என்ற வேதிப்பொருள் அவசியமானது. கடலையை உண்ணும்போது அதில் டிரிப்தோபன் செரோடோனின் வேதிப்பொருள் சுரப்பினை தூண்டுகிறது. எனவே கடலையை உண்டு மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.
இதய நலத்திற்கு
நிலக்கடலையில் காணப்படும் வைட்டமின் இ, நியாசின், ஃபோலேட்டுகள், புரதங்கள், மாங்கனீசு, ரெஸ்வெரடால் போன்றவை இதய நலத்தை மேம்படுத்துகின்றன.
இதில் நிறைவுறாக் கொழுப்புகளே அதிகம் காணப்படுகின்றன. இவை இதயநலத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் இதனை உண்டு இதயநலத்தை மேம்படுத்தலாம்.
ஆரோக்கியமான உடல்எடைக் குறைப்பிற்கு
நிலக்கடலையானது புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து நிறைந்த உணவாகும். இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு உண்டாவதுடன் நீண்ட நேரம் பசிஉணர்வு ஏற்படுவதில்லை.
அதேநேரத்தில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. எனவே இதனை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.
கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு
கடலையில் காணப்படும் ஃபேலேட்டுகள் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஃபோலேட்டுகளை வழங்குகிறது. ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையானது குறைபாடுகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது.
கடலையானது பெரும்பாலும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை. மேலும் இதில் காணப்படும் செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவைகள் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குடல் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்க
கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. கடலையில் உள்ள பீட்டா கௌமரிக் அமிலமானது நைட்ரோசோமைன் எனப்படும் நச்சுப்பொருள் குடலில் உருவாவதைத் தடைசெய்கிறது. இதனால் குடல்புற்று நோய் தடைசெய்யப்படுகிறது.
வாரம் இருமுறை கடலையை உட்கொள்வதால் 25 முதல் 58 சதவீதம் வரை புற்றுநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பித்தநீர்க்கட்டி உருவாவதைத் தடுத்தல்
கடலையினை உண்ணும்போது அதில் உள்ள நிறைவுறா கொழுப்புக்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடைசெய்கிறது. கொழுப்புக்கள் உடலில் சேர்வது தடைசெய்யப்படுவதால் பித்தநீர்க்கட்டி உருவாக்கம் தடுக்கப்படுகிறது.
நினைவாற்றலை அதிகரிக்க
நிலக்கடலையானது மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் பி3 (நியாசின்) மூளையின் நினைவாற்றலை அதிகரிப்பதோடு அதனைச் சிறப்பாக செயல்படவும் தூண்டுகிறது.
மேலும் இதில் உள்ள ரெஸ்வெரடால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்க காரணமாகிறது. மேலும் கடலையை உண்ணும்போது பார்க்கின்சன், அல்சீமர்ஸ் நோய்கள் பாதிப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கின்றன.
நிலக்கடலையை வாங்கி உபயோகிக்கும் முறை
நிலக்கடலையை தோலுடன் வாங்கும்போது கனமானதாக, ஒரே சீரான நிறத்துடன், உப்பியதாகவும், கெட்டுப்போன வாடை இல்லாததாகவும் உள்ளவற்றை வாங்க வேண்டும். உடைத்த கடலையை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
கடலையானது வறுத்தோ, அவித்தோ, அப்படியேவோ உண்ணப்படுகிறது. இதிலிருந்து எண்ணெய், வெண்ணெய் எடுக்கப்படுகிறது. இனிப்புகள், சாலட்டுகள், சட்னி ஆகியவை தயாரிக்க கடலை பயன்படுத்தப்படுகிறது.