வறண்ட நிலத்திலும் நன்கு வளரும் தாவரமான ஆமணக்கு, விதைகளின் தேவைக்காகவே அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த வகை தாவரத்தில் 16 வகைகள் இருந்தாலும், சிற்றாமணக்கு, பேராமணக்கு, செவ்வாமணக்கு, காட்டாமணக்கு ஆகிய 4 ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடியவை. இவற்றில் ஆமணக்கு, சிற்றாமணக்கு, செவ்வாமணக்கு ஆகிய மூன்றும் ஒரே வகைத் தாவரங்கள். காட்டாமணக்கு, வேறு வகை.
60 ஆண்டுக்கு முன்னரே அதிகளவு பயன்பாட்டிற்கு உதவிய ஆமணக்கு எண்ணெய்
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) மற்றும் நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) முதலிய இரண்டு வகை தான் அதிகம் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள். அதுவும், உடலுழைப்பாளிகள் பயன்படுத்தி வந்தது, ஆமணக்கு எண்ணெய் மட்டுமே.
வலி தீர்க்கும் சிற்றாமணக்கு தைலம்
மற்ற வகைகளுக்கிடையே சிற்றாமணக்கு விதைகள் மிக சிறியதாக காணப்படுகிறது. சிற்றாமணக்கு விதைகளே சிறந்த மருத்துவக் குணம் கொண்டுள்ளன. உள் மருந்துகளுக்குச் சிற்றாமணக்கு எண்ணெய், வெளிப்பூச்சு மருந்துகளுக்கு ஆமணக்கு எண்ணெய் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. வயல்வெளி, ஆறு, வாய்க்கால், ஏரிக்கரைகளில் தனிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்குச் செடிகளிலிருந்து விதைகளை சேகரித்து, அவர்களின் வீட்டிலேயே எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், வலிகள் தீர்க்கும் தைலமாகவும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆமணக்கு எண்ணெய்
உடல் எடையினை குறைக்க விரும்புவோர், உணவில் ஆமணக்கு எண்ணெயினை காலை உணவுக்கு முன்னர் 2-3 தேக்கரண்டி அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், உங்கள் உடலில் தண்ணீர் சேருவதை தடுத்து, எடை இழக்க குறைந்தபட்சம் ஒரு சில பவுண்டுகள் வரை உதவுகிறது. இதன் சுவை பிடிக்காதோர் பழ சாறுகளில் கலந்து குடிக்கலாம். இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும். எனவே, இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ள கூடாது. ஒரு வாரம் தொடர்ந்து எடுத்து கொள்ளுங்கள். இடையிடையே உங்கள் எடையினை அடிக்கடி சரிபார்த்து கொள்ளுங்கள். மேலும், இதனை வெளிப்புறமாக வயிற்றின் மேல் ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம், தொப்பையாக உள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைக்க உதவுகிறது.
தலைமுடி பிரச்சனையை தீர்க்க உதவும் ஆமணக்கு எண்ணெய்?
உச்சந்தலையில் ஆமணக்கு எண்ணெயை தடவி விட்டு, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் ஊற வைத்து, பின் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிப்பது மூலம், தலை முடியின் வளர்ச்சியை தூண்ட உதவலாம் என்று கூறப்படுகிறது. விளக்கெண்ணெயில் இருக்கும் இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலையில் பொடுகு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. சில ஆய்வுகள் ஆமணக்கு எண்ணெய் உடைந்த அல்லது பிரிந்த முடி நுனிகளை சரிப்படுத்த உதவும் என்றும் கூறுகின்றன. இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயில் சில துளிகள் சேர்த்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். இது தலையில் ஏற்படும் பொடுகை போக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது எதற்கும் உறுதியான ஆய்வு முடிவுகள் இல்லை என்பதால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு உபயோகப்படுத்துவது நல்லது.
விளக்கெண்ணெயின் (ஆமணக்கு)மருத்துவ குணங்கள்
- ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலைய விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும், வீக்கம் வடியும்.
- பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தனம் கொடுக்கலாம்.
- கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.
- மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.
- ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள், 3 நாட்கள் எடுத்துக்கொள்வதன் மூலம், மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிப்பது அவசியம்.
- இந்த வகை எண்ணெய் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதுடன், ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது.
- உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.
இத்தனை நற்பலன்கள் அளிக்கும் ஆமணக்கினை நாம் இயற்கை மருத்துவமாக கருதி, எந்தவித பின்விளைவுகள் ஏற்படாதவாறு பயன்படுத்தி நன்மைகளை அடையுங்கள்.
M.Nivetha
nnivi316@gmail.com