நம்மில் பலருக்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றி தெரியும். ஆனால் ஜீரோ பட்ஜெட் தோட்டம் பற்றி தெரியுமா? கேள்வி பட்டதுண்டா? மிகவும் யோசிக்க வேண்டாம்.... ஜீரோ பட்ஜெட் தோட்டம் என்றால் உங்களின் வீடுகளில் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள், மீன் கழிவுகள், அரிசி, பருப்பு கழுவிய நீர் போன்றவற்றை முறையாக பிரித்து நீங்களே உங்கள் தோட்டத்திற்கு தேவையான உரத்தை தயாரித்து கொள்ளலாம். இதன் மூலம் வீடுகளுக்கு ஆரோக்கியமான ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதுடன் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும்.
மாடித் தோட்ட இயக்கம்
குறைந்த அளவு இடத்திலும் அல்லது பால்கனி அல்லது மாடியில் என எங்கு வேண்டுமானாலும் தோட்டம் அமைக்காலம். தோட்டத்திற்கு தேவையான மண்கலவை தயார் செய்யும் போது செம்மண், மண்புழு உரம், தேங்காய் நார் , சாண எரு, வேப்பம்புண்ணக்கு, கடலைபுண்ணாக்கு முதலியவற்றை கலந்து தோட்டம் அமைக்கலாம். பொதுவாக தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்களை அரசு தோட்டக்கலை துறையிடமிருந்து வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்கலாம். தரமான விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய காய்கறி கிட் கிடைக்கிறது. மாடித் தோட்ட இயக்கம் என்ற பெயரில் இது தமிழகம் முழுவதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. வெயில் காலங்களில் செடிகளை பாதுகாக்க வலையும் இவர்களிடம் கிடைக்கிறது.
உரம் தயாரிக்கும் முறை
உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளை உரமாக மாற்றி தோட்டங்களில் பயன்படுத்தலாம். முதலில் இரண்டு குப்பைத் தொட்டிகளை தயார் செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை போட வேண்டும். மக்காத குப்பைகளை அகற்றி விட்டு மக்கும் குப்பைகளை தொட்டியில் கொட்ட வேண்டும். அவற்றை மக்க வைத்து உரமாகப் பயன்படுத்தலாம். மீன் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் வெல்லம் சேர்த்து வைக்கும் போது நாற்றமே இல்லாத தேன் போன்ற உரமாக மாறிவிடும். அதே போன்று மீன் தொட்டிகளில் உள்ள நீரை மாற்றும் போது அந்த கழிவு நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம். அதே போன்று அரிசி, பருப்பு, சிறு தானியங்கள் களைந்த நீரை தாவரங்களுக்கு செலுத்தலாம்.
வீட்டுத் தோட்டம் பராமரிப்பு
- வெயில் காலங்களில் தினமும், குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு தேவை அறிந்து தண்ணீர் விட்டால் போதுமானது.
- தண்ணிர் என்பது தாவரம் உயிர் வாழ போதுமானது. ஆனால் அதிக மகசூல் வேண்டுமெனில் அதற்கு தேவையான உயிர் சத்து மிக்க இயற்கை உரங்களை பயன் படுத்த வேண்டும்.
- சாண எரு, ஆட்டு கழிவு, முட்டை ஓடு, மீன் தொட்டி நீர், வெங்காயம் , பூண்டு இவற்றின் தோல்கள் என அனைத்தையும் உங்கள் தோட்டங்களில் பயன் படுத்தலாம்.
- இலைகளில் தோன்றும் பூச்சி, புழுக்கலுக்கு மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம்.
- வேர்பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு, வேப்பிலைகளை பயன்படுத்துவதன் மூலம் செடிகளை பாதுகாக்க முடியும்.
- வாரம் ஒரு முறை மண்ணை கிளறி விட வேண்டும். காபி தூள், டீ தூள் மற்றும் மற்ற கழிவுகளை செடிகளுக்கு உரமாக இடலாம். இதன் மூலம் செடிகள் நன்கு வளரும்.
Anitha Jegadeesan
Krishi Jagran