உடல் எடையைக் குறைக்க மற்றும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அனைவரும் பின்பற்றும் வழிமுறை தான் டையட் (Diet). லோ க்ளைசெமிக் டயட் தான் இன்று மருத்துவ உலகின் வைரல். சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை கிளைசெமிக் (Glycemic) என்ற அளவால் குறிப்பார்கள். இந்த சர்க்கரை கலக்கும் விகிதத்துக்கு ஏற்பத்தான் உடலில் இன்சுலின் சுரக்கும்.
கிளைசெமிக் இண்டெக்ஸ்
சர்க்கரை நோயாளிகள் உடலில் ரத்தத்தில், சர்க்கரை மெதுவாகக் கரைந்தால் இன்சுலின் (Insulin) சுரப்பும் சீராக இருக்கும். அரிசி, கோதுமை, பார்லி, சிறுதானியங்கள், ரொட்டி, பருப்புகள், காய்கறிகள், பழங்கள் என அனைத்திலுமே கார்போஹைட்ரேட் (Carbohydrate) உள்ளது. குறிப்பாக, அரிசி, கோதுமை, பார்லி போன்றவற்றில் மற்ற உணவுகளை விடவும் அதிகமாக இருக்கும். இவற்றை நாம் உண்ணும்போது நம் உடல் இதை எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக உடைத்து ஆற்றலாக மாற்றும். இப்படி, ஒரு உணவுப்பொருள் சர்க்கரையாக மாறி ரத்தத்தில் கரையும் விகிதமே கிளைசெமிக். என்னென்ன உணவுப்பொருள் என்ன விகிதத்தில் ரத்தத்தில் சர்க்கரையாய் கரைகிறது என்பது கிளைசெமிக் இண்டெக்ஸ். இதை கனடாவைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஜென்கின்ஸ் உருவாக்கினார்.
அளவீடு:
ஐம்பது கிராம் குளுக்கோஸ் சர்க்கரையை உடலில் சேர்க்க எவ்வளவு உணவு தேவை என்பதன் அடிப்படையில் இந்த ஜி.ஐ (G.I.) எனப்படும் கிளைசெமிக் இண்டெக்ஸ் மதிப்பிடப்படுகிறது. லோ கிளைசெமிக் (Low glycemic) என்றால் 55, மத்திய கிளைசெமிக் (Middle glycemic) விகிதம் என்றால் 56-69 மற்றும் ஹை கிளைசெமிக் (High glycemic) என்றால் 70+ என்பது இதன் மதிப்பீடு. லோ கிளைசெமிக் டயட்டில் 55க்கும் குறைவான உணவுப் பொருட்கள் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும். அதிக கிளைசெமிக் விகிதம் உள்ள உணவுகள் அளவாக எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும்.
கிளைசெமிக்கை புரிந்துகொள்ள ஸ்டார்ச் (Starch) என்ற அமைப்பை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டார்ச் என்பது அமிலோஸ் மற்றும் அமிலோபெக்டின் என்ற இரண்டு மூலக்கூறுகளால் ஆனது. இதில் அமிலோஸ் செரிக்க சிரமமானது. அமிலோபெக்டின் எளிதில் செரிமானமாகும். அதிகமான அமிலோஸ் உள்ள உணவுகள் ரத்தத்தில் மெதுவாக சர்க்கரையைச் சேர்க்கும் என்பதால் இதன் கிளைசெமிக் விகிதம் குறைவு. எனவே, இவற்றை இந்த டயட்டில் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!