சிவபூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தை தாண்டி சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. வில்வத்தின் காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு, ஊறுகாய், குடிநீர் என பலவகைகளிலும் உட்கொள்ளலாம். வில்வத்தை தைல முறையிலும் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
வேர்
வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம்(அழல் சுரம்), இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும். வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.
வில்வ வேர் குடிநீர்
வில்வப் பத்திரி வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு மூன்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, எட்டில் ஒரு பங்காக நீர் சுருங்கிய பின் அதனை வடிகட்டி அத்துடன் தேன் கலந்து அருந்த கொடிய முப்பிணி, வாந்தி தீரும்.
வில்வத்தளிர்
வில்வத்தின் தளிர் இலைகள் எல்லாவகையான மேகநோய்களையும் (பால்வினை நோய்கள்) போக்கும்.
Also Read : தேகம் மினுமினுக்கப் பயன்படும் குப்பைமேனி!
இலை
இலையை வாட்டி மெல்லிய துணியில் முடிந்து ஒத்தடம் கொடுக்க மேகநோயால் உண்டாகும் கண் சிவப்பு நீங்கும். இலை ஒன்றுக்கு நாலு பங்கு நீர் சேர்த்து அது ஒரு பங்கு நீராக சுருங்கிய பின் குடிக்க மேகவாயு, வயிற்றுக்கடுப்பு இவற்றைப் போக்கும். காய்ச்சலுக்கும் கொடுக்கலாம். இலைச்சாற்றைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொடுக்க சோகை, மஞ்சள் காமாலை தீரும். இலைச்சாற்றுடன் நீர் அல்லது தேன் கலந்து கொடுக்க மூக்கில் நீர் வடிதல் மற்றும் காய்ச்சல் நீங்கும். இலைச்சாற்றுடன் கோமியம் கலந்து 80 லிருந்து 170 மில்லி வீதம் கொடுக்க ரத்தசோகை, வீக்கம் நீங்கும்.
பூக்கள்
வில்வப்பூ மந்தத்தைப் போக்கும். மேலும் வாய்துர்நாற்றத்தைப் போக்கி, விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது.
பிஞ்சு
வில்வத்தின் இளம் பிஞ்சை அரைத்து 2-6 கிராம் எருமைத்தயிரில் கலந்து கொடுக்க அல்சர், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நிற்கும். இந்த முறை சிறுபிள்ளைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
காய்
வில்வக்காயை பசும்பால் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்க, மண்டைச்சூடு, கண்ணெரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும். வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு நீர் சேர்த்து காய்ச்சி குடிக்க மூல நோய் நீங்கும்.
பிசின்
வில்வ மரத்தின் பிசின் விந்தணுக் குறைபாட்டைப் போக்கும்.
வில்வப்பொடி
இரண்டிலிருந்து நான்கு கிராம் அளவுக்கு கழிச்சல் நோய்க்கு சாப்பிடலாம்.
பொது குணங்கள்
மன உளைச்சலால் ஏற்படும் வயிற்றெரிச்சலுக்கு வில்வம் ஒரு சிறந்த மருந்து. இத்தனை சிறப்புகள் வாய்ந்த வில்வத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி நலம் பெறுவோம்.
மேலும் படிக்க