பற்களில் வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். இதேபோல் பல்லை எடுத்து விட்டால் நல்லது என்ற எண்ணமும் பலரின் மனதில் எழுகிறது. ஆனாலும், இதற்காக பலமுறை பல் மருத்துவரிடம் செல்ல வேண்டியதிருக்குமே என்று தயங்குவார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக பற்களின் வேர் சிகிச்சையில் நவீனமான பல மாற்றங்கள் வந்துள்ளன.
வேர் சிகிச்சை
வேர் சிகிச்சைக்காக மூன்று முதல் நான்கு முறை பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலை மாறி தற்போது சிங்கிள் விசிட் எண்டோடான்டிக்ஸ் (Single Visit Endodontics) எனப்படும் நவீன முறை வழக்கத்திற்கு வந்துவிட்டது. அதாவது வீக்கமோ அல்லது தொற்றோ இல்லாதவர்களுக்கு பற்களில் வேர் சிகிச்சையானது ஒரு நாளில் ஒரே வேளையில் செய்து முடிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பல் மருத்துவத்தில் அறிமுகமாகியுள்ள நவீன கருவிகளாகும்.
முன்பு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃபைல்ஸ் (Files) எனப்படும் பிரத்யேக கருவியைக் கொண்டு கைகளால் பல்லின் வேரானது சுத்தம் செய்யப்பட்டது. ஆகையால் நீண்ட நேரம் மற்றும் பல முறை பல்மருத்துவரிடம் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது இந்த ஃபைல்ஸ் நிக்கல் டைட்டானியம்(Ni-Ti) எனும் கலப்பு உலோகத்தினால் தயாரிக்கப்பட்டு அதை ஒரு பிரத்யேக மோட்டார் (Endomotor) கொண்டு இயக்கப்படுகிறது.
இந்த Ni-Ti ஆனது எளிதில் வளையக்கூடிய ஒரு கலப்பு உலோகமாகும். இது வேரின் நெளிவிற்கேற்ப வளைந்து செல்வதால் குறைவான நேரத்தில் முறையான வேர்சிகிச்சை செய்து முடித்துவிடலாம். வேர் சிகிச்சையானது பல்லின் வேர் வரை மட்டுமே செய்யப்படும். வேரைத் தாண்டி பல்புறத்திசு அல்லது எலும்பினுள் போகக்கூடாது. சிகிச்சையின்போது இதை அறிந்து கொள்ள ஒவ்வொரு முறையும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டியதிருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள அபெக்ஸ் லொகேட்டர் (Apex Locator) எனும் நவீன கருவியினைக் கொண்டு வேரை சுத்தம் செய்யும்போதே ஃபைல்ஸ் வேரைத் தாண்டிச் செல்லும்போது ஒலியினை எழுப்பி எச்சரித்து விடும். இதனால் சிகிச்சையினை விரைந்து முடிக்க இயலும். இதேபோல முன்பெல்லாம் பல்லை எக்ஸ்ரே எடுக்க சிகிச்சையின் நடுநடுவே வாயில் ஃபிலிம் வைத்து எக்ஸ்ரே எடுத்த பின்னர் அதனை டெவலப் செய்து பார்க்க வேண்டும்.
தற்போது RVG எனப்படும் டிஜிட்டல் எக்ஸ்ரே வந்துவிட்டது. இதில் உள்ள சென்சாரை வாயில் வைத்து எக்ஸ்ரே எடுத்தால் அந்த நொடியிலேயே கணினி திரையில் தெரிந்துவிடும். இந்த எக்ஸ்ரே இமேஜை எப்போது வேண்டுமானாலும் பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ பார்க்கவும் இயலும்.
மேலும் படிக்க
சரும புற்றுநோய்க்கு நவீன தொழில்நுட்ப முறையில் கதிரியக்க சிகிச்சை!
பாதங்களை பாதுகாக்கும் பயனுள்ள பயிற்சிகள்: தெரிந்து கொள்வோம்!